மீண்டும் திமுகவில் இணையும் மு.க.அழகிரி…: பணிந்தாரா ஸ்டாலின்…?

திமுகவில் இருந்து கருணாநிதியால் நீக்கப்பட்ட திமுகவின் தென்மாவட்ட செயலாளரான மு.க.அழகிரி மீண்டும் திமுகவில் சேர்க்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது திமுக தொண்டர்களிடையே  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மு.க.அழகிரின்  அதிரடி அறிவிப்பு காரணமாக திமுக தலைவர் ஸ்டாலின் பணிந்துவிட்டதாகவும், அழகிரியை கட்சியில் சேர்க்க கூறி கருணாநிதி குடும்பத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாலும் அழகிரியை திமுகவில் மீண்டும் சேர்க்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

திமுக தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து, அவர்கள் குடும்பத்திற்குள் பதவிச்சண்டை சூடு பிடித்து உள்ளது.  திமுகவில் இருந்து ஏற்கனவே கருணாநிதியால் நீக்கப்பட்ட மு.க.அழகிரி, கட்சியில் பதவி கேட்டு திமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளார்.

இந்த நிலையில், அடுத்த மாதம் (செப்டம்பர்)  5-ந்தேதி கருணாநிதி நினைவு இடத்துக்கு  அமைதிப் பேரணி நடக்க இருப்பதாகவும், இந்த பேரணியில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார்  75 ஆயிரம் முதல்  1 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என்று அதிரடியாக அறிவித்து திமுகவுக்கு கிலியை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் இருவருக்கும் இடையில் கருணாநிதி குடும்பத்தை சேர்ந்தவர்கள் சமரசம் பேசி வந்ததாக தகவல் வெளியானது. அதையடுத்து, திமுக தலைவராக ஸ்டாலினை ஏற்றுகொள்வதாகவும், தன்னை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று மு.க.அழகிரி கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

யார் இந்த அழகிரி:

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் புதல்வர்களான மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின் ஆகிய இருவரும் திமுகவில் கட்சி பணி ஆற்றி வந்தனர்.  இரு சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக  திமுக தலைவரான மு.கருணாநிதி, மு.க.அழகிரியை மதுரைக்கு குடிபெயர வைத்தார். தொடர்ந்து அவருக்கு  தென்மண்டல அமைப்பு செயலாளர் பணி வழங்கி தென்மாவட்டங்களில் திமுகவை வளர்க்கக் கூறினார்.

இதையடுத்து தென்மாவட்டங்களை  சேர்ந்த  திமுக நிர்வாகிகளை கைக்குள் கொண்டுவந்த அழகிரி, கட்சிக்கு எதிராக தனி ஆவர்த்தனம் செய்தார்.  அவ்வப்போது மு.க.ஸ்டாலின் நடவடிக்கைக்கு எதிராகவும் குரல் கொடுத்து வந்தார்.

இந்த நிலையில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி, மு.க.அழகிரி மீது திமுக  ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. முதலில் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக அறிவித்த நிலையில், பின்னர் திமுகவில் இருந்து நிரந்தரமாக  நீக்குவதாக கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 25ந்தேதி  திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார்.

அப்போது  திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில், “தி.மு.க. தென் மண்டல முன்னாள் அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததனால், கழகத்திலிருந்து ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், கழகத்தலைமையையும் – கழக முன்னோடிகளையும் இழிவுபடுத்தும் வகையில் விமர்சித்து வருவதாலும், கழகத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாலும்தி.மு.கழகத்திலிருந்து அறவே நீக்கி வைக்கப்படுகிறார்” என தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி,  அழகிரியிடன  நடவடிக்கை குறித்து பலமுறை விளக்கம் கேட்கப்பட்டதாகவும், அவர்   விளக்கம் ஏதும் அளிக்காமல் தொடர்ச்சியாக திமுகவுக்கு எதிராகவே அழகிரி நடந்து கொண்டதாலேயே இது போன்ற நடவடிக்கை எடுக்க முடிவு  செய்யப்பட்டதாக கூறினார்.

இந்த நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியை பல மாதங்களாக சந்திக்க மறுத்த வந்த அழகிரி, இடையிடையே  தனது  தாயார் தயாளு அம்மாவை மட்டுமே சந்தித்து உள்ளக்குமுறல்களை கொட்டி வந்தார்.

கருணாநிதியின் உடல்நிலை மேலும் மோசமான நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் தனது தந்தையும், திமுக தலைவருமான கருணாநிதியை  சந்தித்து அவரது உடல்நலம் குறித்து நலம் விசாரித்தார்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி,  கருணாநிதி அழைத்தால் கட்சி பணியாற்றுவேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில், சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் இழந்தது. இது திமுகவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது,  செய்தியாளர்களிடம் பேசிய  மு.க.அழகிரி, பணம் இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியாது.  ஆர்.கே.நகரில் திமுகவின் செயல்பாடு சரியில்லை என்று கடுமையாக ஸ்டாலின் மீது குற்றம் சாட்டினார்.

தேர்தல் நேரங்களில் கலைஞர் இரவு நேரங்களில் சென்று கட்சிக்காரர்களின் செயல்களை பார்வையிடு வார்,  ஆனால், ஸ்டாலின் அவ்வாறு இல்லை என்றும்,  வெற்றிப்பாதையில் செல்ல வேண்டும் என்றால் திமுகவில் மாற்றம் தேவை என்ற அவர்,  ஸ்டாலின் உடன் இருப்வர்களின் செயல்பாடுகள் சரியில்லை என்று  அதிரடியாக குற்றம் சாட்டினார்.

4 வருடமாக கலைஞர் ஓய்வில் இருந்ததில் இருந்து எந்தவொரு  தேர்தலில்  திமுக ஜெயிக்க வில்லை என்றும், புதுசா வந்தவர்களை கட்சியில் சேர்த்துக்கொண்டு, பதவிகளை கொடுத்தால் கட்சி தொண்டன் ஏற்றுக் கொள்வானா என்று கேள்வி எழுப்பினார்.

ஸ்டாலின் செயல்தலைவராக இருக்கும் வரை திமுக வெற்றி பெறாது என்றும் அதிரடியாக கூறினார். வெற்றிப்பாதையில் செல்லவேண்டுமானால் தி.மு.க.வில் தலைமை மாறுதல் தேவை, அனைவரை யும் ஒருங்கிணைத்து செல்லும் வகையில் தலைமை இருக்க வேண்டும் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருநதார்.

தி.மு.க வெற்றிபெற வேண்டுமானால் புதிதாக வருபவர்களுக்கு பதவி கொடுப்பதை நிறுத்த வேண்டும். துரோகம் இழைத்தவர்களை நீக்கிவிட்டு பழைய உண்மையான தொண்டர்களுக்கு பதவி அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 7ந்தேதி (டிசம்பர் 7ந்தேதி 2018) திமுக தலைவர் கருணாநிதி காலமானார். அவரது  உடல் 8ந்தேதி மாலை மெரினா கடற் கரை அண்ணா சதுக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து 3வது நாளான கடந்த  9ந்தேதி,  கருணாநிதி  குடும்பத்தினர் அனைவரும், அவரது நினைவிடத்தில் ஒட்டுமொத்தமாக வந்து அஞ்சலி செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து,  தனது குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்திய  அழகிரி, “எனது ஆதங்கத்தை அப்பாவிடம் கொட்டிவிட்டேன்.. அது என்ன ஆதங்கம் என்பது உங்களுக்கு இப்போது தெரியாது… காலம் பதில் சொல்லும்… வெயிட் பண்ணுங்க…என்று பொடி வைத்து பேசினார்.

மேலும், கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் அனைவரும் என் பக்கம்தான் இருக்கிறார்கள் என்று கூறி மேலும் சலசலப்பை அதிகப்படுத்தினார்.

இதற்கிடையில் மு.க.அழகிரி தனிக்கட்சி தொடங்கப்போவதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு மதுரையில் பரபரப்பு உருவானது. ஆனால், தனியாக கட்சி தொடங்கும் எண்ணம் கிடையாது. பொறுத்திருங்கள்.. விரைவில் நல்ல முடிவு வரும் என்று கூறி அழகிரி,  என் பாதை தனி. அந்த பாதையில் நான் போய் கொண்டே இருப்பேன். தி.மு.க.வில் சில தவறுகள் நடக்கிறது. அதனால்தான் என்னை மீண்டும் தி.மு.க.வில் சேர்க்க அவர்கள் பயப்படு கிறார்கள் என்று கூறி மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து  அடுத்த மாதம் (செப்டம்பர்)  5-ந்தேதி கருணாநிதி நினைவு இடத்துக்கு  அமைதிப் பேரணி நடத்த இருப்பதாகவும், , இந்த பேரணியில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார்  75 ஆயிரம் முதல்  1 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என்று நேரடியாக திமுகவுக்கு எதிராக காய்களை நகர்த்தினார்.

அதைத்தொடர்ந்து தனது மதுரை வீட்டில் ஆதரவாளர்களுடன் கடந்த சில நாட்களாக ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில், திமுக தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போட்டியின்றி மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  கடந்த 28ந்தேதி நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில்,  திமுகவில் மு.க.அழகிரி மீண்டும் திமுகவில் சேர்க்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  ஸ்டாலின் தலைமையை ஏற்றுக்கொள்வதாக மு.க.அழகிரி ஒப்புக்கொண்டு உள்ளதாகவும், அதைத் தொடர்ந்து அழகிரி மீண்டும்  கட்சியில் சேர்க்கப்பட்டு, அவருக்கு  பதவி வழங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கருணாநிதி உயிரோடு இருந்தவரை  மு.க.அழகிரியை கட்சியில் சேர்க்க கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்த ஸ்டாலின், தற்போது தலைவர் பதவியை கைப்பற்றி உள்ள நிலையில், குடும்பத்தி னரின் தொடர் வற்புறுத்தல் காரணமாகவே சில நிபந்தனைகளுடன் அழகிரியை கட்சியில் இணைக்க முடிவெடுத்திருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

அழகிரியின் அதிரடி  அறிவிப்புகளுக்கும், குடும்பத்தினரின் தொடர் வலியுறுத்தல்களுக்கும் பணிந்து, வேறு வழியில்லாமல், கட்சி உடைவதை  காப்பாற்றும் நோக்கில்தான்   மு.க.ஸ்டாலின்  இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இது திமுக தொண்டர்களிடையே  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.