அரசியலில் இருந்து முழுமையாக ஒதுங்கிவிட்டார் அழகிரி?

தி.மு.க.வின் தலைவராக இருந்த மறைந்த மு.கருணாநிதியின் மகனும் அக்கட்சியில் கோலோச்சி பிறகு நீக்கப்பட்டவருமான மு.க. அழகிரியின் அரசியல் எதிர்காலம் முடிவுக்கு வந்துவிட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன்களில் ஒருவரான மு.க. அழகிரி, அக்கட்சியில் முக்கிய பிரமுகராக வலம் வந்தார். மத்திய அமைச்சராகவும், தென்  மண்டல பொறுப்பாளராகவும் பொறுப்பு வகித்தார்.  அவருக்கும் அவரது சகோதரரும் கட்சின் செயல் தலைவராக இருந்தவருமான மு.க.ஸ்டாலினுக்கும் கருத்துவேறுபாடு இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் கட்சிவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக மு.க. அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.  இதற்கிடையில் அரசியலில் இருந்து  அவர் ஒதுங்கியிருந்தார்.

தி.மு.க. தலைவராக பொறுப்பு வகித்த மு.கருணாநிதி மறைந்த நிலையில், மீண்டும் மீடியா வெளிச்சத்துக்கு அழகிரி வந்தார். தன்னை கட்சியில் சேர்க்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் தனது பலத்தை காட்ட வேண்டியிருக்கும் என்றார். கருணாநிதி நினைவிடம் நோக்கி பெரும் பேரணி  நடத்தவேன் என்றார். ஆனால் அந்த பேரணிக்கு குறைவாகவே கூட்டம் வந்தது. அதன் பிறகு மீண்டும் அமைதியானார்.

இந்த நிலையில் அரசியலைவிட்டு மு.க. அழகரி முழுமையாக ஒதுங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து கூறப்படுவதாவது:

“கருணாநிதி மறைவை அடுத்து மீண்டும் லைம் லைட்டுக்கு வந்தார் அழகிரி. அவரது ஆதரவாளர்கள் சார்பில், கருணாநிதியின் புகழஞ்சலி நிகழ்ச்சி, அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த  திருவாரூரில் நே நடைபெற்றது. இதில் பங்கேற்ற மு.க.அழகிரி, “திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலில் நான் போட்டியிட வேண்டும் என பலரும் என்னிடம் கூறி வருகின்றனர். சிலர் அன்புக் கட்டளையிடுகின்றனர். இடைத்தேர்தல் நடைபெற்று நான் போட்டியிட்டால் ஓட்டு கேட்கிறேனோ இல்லையோ, எனக்கு இழைக்கப்பட்ட அநீதியை மக்களிடத்தில் கேட்பேன்.

திருவாரூரில் எனக்கு மக்கள் அளிக்கும் வரவேற்பை பார்க்கும்போது, தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள செலவுத் தொகையைக் கூட செலவு செய்யாமல் நான் வெற்றிபெறுவேன்” என்றார்.

இந்த நிலையில் கஜா புயல் வீசி திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் கடும் பாதிப்படைந்தன. ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். லட்சக்கணக்கான தென்னை மரங்கள் அடியோடு வீழ்ந்தன. இதனால் விவசாயிகள் தங்கள் எதிர்காலம் குறித்த அச்சத்தில் இருக்கிறார்கள்.

புயல் வீசி பல நாட்களாகியும் இன்னமும் பல இடங்களில் மக்கள் உணவும், நீரும் இன்றி தவிக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.க. ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. அதே போல திரை நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் பலரும் நிதி உதவி அளித்துள்ளனர். தன்னார்வலர்கள் பலரும் நேரடியாக டெல்டா மாவட்டங்களுக்குச் சென்று புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்.

ஆனால் திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்த மு.க. அழகிரி இந்தப் பக்கம் வரவே இல்லையே. உதவி செய்யாவிட்டாலும் குறைந்தபட்சம் ஆறுதலாக ஒரு அறிக்கையாவது விட்டிருக்கலாம். அதுகூட இல்லை என்கிற போது, அரசியலைவிட்டு முழுதும் விலகும் முடிவை அவர் எடுத்துவிட்டதாகவே தெரிகிறது” என்று கூறப்படுகிறது.

இன்னொரு புறம் அவரது ஆதரவாளர்கள் சிலர், இன்னமும் அவர் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்கள், “எதையும் திட்டமிட்டு செய்பவர் அழகிரி. புயலால் பாதிக்கப்பட்ட் டெல்டா மாவட்ட மக்களுக்கு.. குறிப்பாக திருவாரூர் மாவட்ட மக்களுக்கு பெரிய அளவில் நிவாரண உதவி செய்ய திட்டமிட்டிருக்கிறார். விரைவில் அதுகுறித்து அறிவிப்பார்” என்கிறார்கள்.

#MKAzhagiri # left # politics