தமிழக அமைச்சருடன் மு.க.அழகிரி திடீர் சந்திப்பு: மதுரையில் பரபரப்பு
மதுரை:
திமுகவில் இருந்து ஓரங்கப்பட்டிருந்த மு.க.அழகிரி இன்று அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜுவை அவரது மதுரை இல்லத்தில் சந்தித்து பேசினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுகவில் ஏற்பட்ட குடும்ப மோதல் காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 25-ந்தேதி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி,திமுக தலைவர் கருணாநிதி காலமானதை தொடர்ந்து மீண்டும் தன்னை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று அழகிரி குரல் கொடுத்தார். ஆனால், திமுக தலைமை அவரை மீண்டும் கட்சியில் சேர்க்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
இதற்கிடையில், கடந்த 5ந்தேதி அமைதி பேரணி நடத்தி திமுக தலைமைக்கு தனது பலத்தை நிரூபித்தார். அதைத் தொடர்ந்து நான் இல்லாமல் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தலில் திமு வெல்லவே முடியாது என்றவர், அங்கு போட்டியிட்டால் ‘மூன்றாவது இடத்துக்கு தான் வருவார்கள். திருப்பரங்குன்றத்தில் நான்காவது இடத்திற்கு போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும், திமுக தலைவர் கருணாநிதியை மிரட்டியே தன்னை கட்சியில் சேர்க்காதவாறு தடுத்ததாகவும் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் இன்று காலை தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூவை, மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் மு.க.அழகிரி சந்தித்துப் பேசினார். தனது ஆதரவாளர்கள் புடைசூழ சென்ற மு.க. அழகிரியை, அமைச்சர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விசாரித்ததில், கடந்த 30 ஆம் தேதி அன்று அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாயார் ஒச்சம்மாள் காலமனார். அதைத் தொடர்ந்தே அமைச்சருக்கு ஆறுதல் கூற அழகிரி அங்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு செல்லூர் ராஜூ தாயாரின் உருவபடத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதைத்தொடர்ந்து இருவரும் சுமார் 15 நிமிங்கள் தனியாக ஆலோசனை நடத்தினார். அமைச்சர் செல்லூர் ராஜூ – மு.க.அழகிரி சந்திப்பு நடைபெற்றதை தொடர்ந்து அரசியல் வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.