Random image

தி.மு.க. தலைவர் அன்பழகன்? திருவாரூர் தொகுதி வேட்பாளர் மு.க. அழகிரி?

நியூஸ்பாண்ட்:

சோகமான முகத்துடன் வந்த நியூஸ்பாண்ட், தனது இருக்கையில் அமர்ந்தார். அவரது மூட் அறிந்த நாம் அமைதியாக இருந்தோம்.

“தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சமாதிக்குச் சென்று வருகிறேன். இன்றும் ஏராளமான தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் வந்து அஞ்சலி செலுத்தியபடி இருக்கிறார்கள். கட்சி வரையறையைத் தாண்டி அவரை நேசிக்கும் மக்கள் ஏராளமாக இருக்கிறார்கள் என்பது எத்தனை பெரிய அங்கீகாரம்!” என்றார் மெல்லிய குரலில்.

நாம் ஆமோதித்து தலையாட்ட.. டேபிளில் இருந்த ஜக்கில் இருந்து டம்ளரில் தண்ணீரை ஊற்றிக் குடித்தார்.

அவரை கொஞ்சம் ரிலாக்ஸ்ட் ஆக்குவதற்காக, “சோகத்திலும் ஒரு மகிழ்ச்சியான விசயமாக மெரினாவில் கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட விசயம் பார்க்கப்படுகிறதே..” என்றோம்.

“ஆமாம்! மெரினாவில் சமாதி கூடாது என்பவர்கள்கூட, தமிழக அரசின் நடவடிக்கைகளை ரசிக்கவில்லை. இந்த விசயத்தில் நீதிமன்றத்துக்கு சென்று தி.மு.க. வெற்றி பெற்றதை மகிழ்ச்சியுடன் ஏற்கிறார்கள். குறிப்பாக இதை ஸ்டாலினின் வெற்றியாக பார்க்கிறார்கள்!” என்றார் நியூஸ்பாண்ட்.

அழகிரி

“உண்மைதானே!” என்றோம் நாம்.

“ஆம்..! அதே நேரம் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வந்துவிட்ட ஸ்டாலின், கட்சிக்கு ஏதும் சேதாரம் ஏற்படாமல் வழிநடத்த வேண்டும்” என்று நலன்விரும்பிகள் எதிர்பார்க்கிறார்கள்!”

“நாளை மறுநாள்தானே தி.மு.க.வின் அவசர செயற்குழு கூட்டம் கூடுகிறது. அதில்தானே தலைவரை தேர்ந்தெடுப்பார்கள்?”

“கட்சி சட்டத்திட்டங்களுக்காக கூட்டப்படும் செயற்குழுதான் அது என்பதும், ஸ்டாலின்தான் தலைவர் என்பதும் அனைவரும் அறிந்ததுதானே!”

“அதுவும் சரிதான்! ஆனால் கட்சியில் ஏதே சேதாரம் என்று நலன் விரும்பிகள் கவலைப்படுவதாக கூறினீரே..!”

ஸ்டாலின்

“ஆமாம்! மு.க. அழகிரியால் ஏதும் பிரச்சினை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் நலன்விரும்பிகளிடம் இருக்கிறது!”

“தென் மண்டல அமைப்புச்செயலாளராக இருந்த அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டவுடன் பெரும்பாலும் அமைதியாகத்தானே இருக்கிறார்?”

“ஆமாம்! ஆனால் அந்த அமைதி தொடருமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. தலைவரான தந்தை மறைந்த நிலையில் மாநில அளவில் முக்கிய பொறுப்பு தனக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் தந்தை கருணாநிதி மறைந்ததால் காலியாக இருக்கும் திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் தான் போட்டியிட வேண்டும் என்றும் விரும்புகிறாராம் அழகிரி. இதை ஸ்டாலின் தரப்புக்கும் சொல்லிவிட்டாராம்!”

தவிர, அழகிரி தரப்புக்கு புதிதாக ஒரு வருத்தம்!”

“என்ன அது?..”

கனிமொழி

”முரசொலிதான் கருணாநிதியின் மூத்த பிள்ளை. அதுதான் என் அண்ணன் என்று ஸ்டாலின் பேசினார் அல்லவா…. அது அழகிரியை தொடர்ந்து ஒதுக்கிவைக்கும் முயற்சியின் வெளிப்பாடு என்று நினைக்கிறது அழகிரி தரப்பு!”

“ஓ..! அது சரி, கட்சியில் முக்கிய பொறுப்பு, திருவாரூர் வேட்பாளர் என்கிற அழகிரியின் ஆசைகள் குறித்து ஸ்டாலின் தரப்பு என்ன சொல்கிறதாம்?“

”அழகிரி கட்சியில் பொறுப்பில் இருந்தபோது இரண்டு அணிகளாக செயல்பட்டன. அழகிரி ஆதரவாளர்கள் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டனர். இதனால் கட்சிக்குள் குழப்பங்கள் ஏற்பட்டன. மீண்டும் அதுபோல நடக்கக்கூடாது.

கட்சி தற்போது முக்கிய கட்டத்தைக் கடந்துகொண்டிருக்கிறது. ஆகவே வழக்கம்போல அழகிரி அமைதி காப்பதுதான், தந்தை கட்டிக்காத்த கட்சிக்கு நல்லது என்று சொல்லப்பட்டதாம்..”

“ஓ…”

“இதற்கு அழகிரி தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாம். கட்சிக்கா தான் உழைத்ததை எல்லாம் பட்டியலிட்ட அழகிரி, நான் என்ன தலைவர் பதவியையா கேட்கிறேன்? மாநில அளவில் ஒரு முக்கிய பொறுப்பு வேண்டும் என்றுதானே கேட்கிறேன் என்கிறாராம்!”

“ம்…”

“இது குறித்து குடும்ப அளவில் ஆலோசனை நடந்ததாம். பெரும்பாலோர் அழகிரிக்கு ஆதரவாக இருக்கிறார்களாம். அதாவது தலைவராக ஸ்டாலின் இருக்கட்டும். அடுத்தகட்ட பதவியை அழகிரிக்கு அளிக்கலாம் என்கிறார்களாம்!”

“இதற்கு ஸ்டாலின் தரப்பு..?“
”ஸ்டாலின் தரப்பில் தனியாக ஆலோசனை நடந்திருக்கிறதாம். அழகிரியின் விருப்பத்தை நிராகரிக்க ஒரு யோசனை வைக்கப்பட்டதாம். அதாவது, கட்சித் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்காமல், க.அன்பழகனுக்கு வழங்குவது என்று ஒரு யோசனை ஓடியதாம்!”

“அட..!”

“இன்னும் கேளும்.. அன்பழகன், ஸ்டாலின் மீது தனிப்பாசம் உள்ளவர். கருணாநிதியின் நெருக்கமான நண்பர்களில் ஒருவராக இருந்தவர். கட்சிக்கு எந்தவித சேதாரமும் வந்துவிடக்கூடாது என்று விரும்புபவர். ஆகவேதான் தலைமைப்பதவிக்கு அவர் பரிசீலிக்கப்பட்டாராம். முக்கியமாக இன்று கட்சியில் இருப்பவர்கள் ஸ்டாலின் ஆதரவாளர்கள்தான். ஆகவே செயற்குழுவில் இந்த முடிவுக்கு அனைவரும் ஆதரவளிப்பார்கள் என்றும் பேசப்பட்டதாம்!”

“அன்பழகன் வயோதிகம் காரணமாக உடல்நலம் முடியாமல் இருக்கிறாரே..!”

“கருணாநிதி அப்படித்தானே இருந்தார்… தலைவருக்கு பதிலாக செயல்தலைவர் செயல்படவில்லையா என்கிறார்களாம்!”

“அதுவும் சரிதான்!”

“அதே நேரம்.. அழகிரிக்கு கட்சியில் முக்கிய பதவி அளிக்காவிட்டாலும் பரவாயில்லை. திருவாரூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கலாம் என்றும் ஒரு யோசனை குடும்பத்தினரால் வைக்கப்பட்டதாம்!”

“ஓ..”

“ஆனால் ஸ்டாலின் தரப்பினர், அத்தொகுதியை கனிமொழிக்கு வேண்டுமானால் அளிக்கலாம் என்று ஒரு யோசனையை சொல்லியிருக்கிறது!”

“அதென்ன கனிமொழி மீது தனிப்பாசம்?”

அன்பழகன்

”கனிமொழி அதிரடியாக கருத்துக்களை சொல்பவர் அல்ல. அவரது செயல்பாடுகளும் இயல்பாக இருக்கும். ஸ்டாலின் கைமீறி அவர் செல்லமாட்டார் என்கிற எண்ணமாக இருக்கும்!”

“இருக்கும்.. இருக்கும்!”

“ஆனாலும் ஸ்டாலின் தரப்பு பல்வேறுகட்ட தனி ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறது. நாளை மறுநாள் செயற்குழு கூட இருக்கும் நிலையில் இந்த சந்திப்புகள் ஆலோசனை கூட்டங்கள் சூடுபிடித்துள்ளன!” – நியூஸ்பாண்ட் பேசிக்கொண்டிருக்கும்போதே அவரது செல்போன் சிணுங்க.. எடுத்து காதில் ஒற்றியவர் சில நிமிடங்கள் பேசிவிட்டு வைத்தார்.

பிறகு நம்மை நேருக்கு நேராக பார்த்தவர், “திருவாரூர் தொகுதியில் அழகிரி போட்டியிடக்கூடும் என்கிறார் கோபாலபுர தகவல்கள் அறிந்த சோர்ஸ் ஒருவர்!” – சொல்லிவிட்டு சடுதியில் கிளம்பி மறைந்தார் நியூஸ்பாண்ட்.

You may have missed