சென்னை

பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு குறித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் சிபிஐக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த 1992 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி அன்று கர சேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.  இதையொட்டி சிபிஐ அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 32 பேர் மீது வழக்கு தொடர்ந்தது.  லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின், “தொழுகை நடத்தும் இடத்தை அழிக்கும் நோக்கத்துடன், மொத்த மசூதியும் திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் இடித்துத் தள்ளப்பட்டுள்ளது” (the entire structure of the mosque was brought down in a calculated act of destroying a place of public worship) என்று பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்த பிறகும்; “பாபர் மசூதி இடிப்பு வழக்கினை – அதில் உள்ள குற்றச்சதியை நிரூபிக்க முடியாமல், சி.பி.ஐ. தோற்று இருப்பது,

இந்திய நாடு பாதுகாத்திட வேண்டிய சட்டத்தின் ஆட்சிக்கு மிகுந்த தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் சட்டத்திற்கு நெருக்கடி தந்த பாபர் மசூதி வழக்கில் நடுநிலையாகச் செயல்பட்டிருக்க வேண்டிய சி.பி.ஐ., பா.ஜ.க.அரசின் கூண்டுக்கிளியாகி, கடமை துறந்து, தோற்றிருப்பது நீதியின் பாதையில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும்” எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “ மொத்த மசூதியும் திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் இடித்துத் தள்ளப்பட்டுள்ளது, என உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்த பின்னரும், சி.பி.ஐ தோற்றிருக்கிறது.  மசூதி மட்டுமல்ல; எந்தவொரு மத வழிபாட்டுத் தலத்தையும் ஆக்கிரமிப்பதும், அழிப்பதும் அநியாயத்திலும் அநியாயமாகும்; அப்பட்டமான சட்ட விரோத செயலாகும்.

குற்ற வழக்குகளில் – குறிப்பாக உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் நன்மதிப்பைச் சீர்குலைத்த “பாபர் மசூதி” இடிப்பு வழக்கில் – நடுநிலையுடன், எச்சரிக்கையாகவும் நியாயமாகவும் செயல்பட்டிருக்க வேண்டிய சி.பி.ஐ., அப்படிச் செயல்பட ஏனோ தவறி, இன்று மத்திய பா.ஜ.க. அரசின் “கூண்டுக்கிளியாக” மாறிவிட்டது வெட்கக் கேடானது.

அரசியல் சட்டத்திற்கு நெருக்கடியை உருவாக்கிய ஒரு முக்கிய வழக்கில், பொறுப்பில்லாமல் ஏனோதானோ மனப்பான்மையுடன், சி.பி.ஐ. செயல்பட்டு – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழான தனது கடமைகளைத் துறந்திருப்பது, நீதியின் பாதையில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பது அனைவர்க்கும் ஆழ்ந்த கவலையைத் தருவதாகும்.” எனத் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.