சென்னை

கொரோனா தடுப்பூசி விலையை உற்பத்தி நிறுவனம் உயர்த்தியது மனித நேயமற்ற செயல் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வரும் மே மாதம் 1 ஆம் தேதி முதல் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.  மேலும் கொரோனா தடுப்பூசியை மாநில அரசுகளும் தனியாரும் நேரடியாக உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கான விலையை வெளிப்படையான முறையில் அறிவிக்க வேண்டும் என உற்பத்தி நிறுவனங்களுக்கு உத்தரவு இடப்பட்டுள்ளது.

இதையொட்டி சீரம் நிறுவனம் தனது கோவிஷீல்ட் தடுப்பூசிகள் மத்திய அரசுக்கு ரூ.150, மாநில அரசுகளுக்கு ரூ.400 மற்றும் தனியாருக்கு ரூ.600 என விலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி ரூ.150 க்கு வழங்கப்படும் எனக் கூறியுள்ள சீரம் நிறுவனம் மாநில அரசுகளுக்கான விலையை 400 ரூபாயாக உயர்த்தியிருப்பது கவலையும் அதிர்ச்சியும் அளிக்கிறது.

மத்திய அரசு மாநிலங்களுக்குத் தேவையான தடுப்பூசிகளை மாநிலங்களே நேரடியாகக் கொள்முதல் செய்து கொள்ளலாம் எனவும் மே 1-ஆம் தேதிக்குள் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் வெளிப்படையான முறையில் விலையை அறிவிக்க வேண்டும் என்றும் கூறிய நிலையில், கடுமையான விலை உயர்வைத் தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்திருப்பது மனிதநேயமற்ற செயல்.

மத்திய அரசு மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு முன்கூட்டியே 4500 கோடி ரூபாயை மத்திய அரசு செலுத்துகிறது. ஆனால் மாநில அரசுகள் உடனடியாக நிதிக்கு எங்கே போகும்?  மேலும் மத்திய அரசு அறிவித்துள்ள அனைவருக்கும் தடுப்பூசி என்ற திட்டத்தை எப்படிச் செயல்படுத்த முடியும்?

சீரம் நிறுவனம் மத்திய அரசுக்கு 150 ரூபாய்க்குத் தடுப்பூசியை விற்பனை செய்ய முன் வரும்போது மாநில அரசுகளுக்கு மட்டும் 400 ரூபாயாக விலையை உயர்த்தியிருப்பது எந்த வகையில் நியாயம்?  ஆகவே அனைத்து மாநிலங்களுக்குமே 150 ரூபாய்க்குத் தடுப்பூசி கிடைக்கவும் அந்தத் தொகையை ஒதுக்கீடு செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.