கிளர்ச்சி செய்ய தூண்டாதீர்!: மத்திய அரசுக்கு முக ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தைச் சென்னையிலிருந்து திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துக்கு மாற்றும் மத்திய அரசின் முயற்சிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

 

“செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தைச் சென்னையிலிருந்து திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துக்கு மாற்றும் மத்திய பாஜக அரசின் முயற்சிக்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழின் தொன்மையையும், தனித்தன்மையையும் பாராட்டி, அங்கீகாரம் அளித்திடும் வகையில், நீண்ட காலமாக ‘தமிழுக்குச் செம்மொழி’ அந்தஸ்து கோரி தமிழறிஞர்களும், மொழிப்பற்றாளர்களும் போராடி வந்திருக்கிறார்கள்.

 

இந்நிலையில் மைசூரில் இருந்து போராடிப் பெற்று வந்த செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை குறிப்பாக, தன்னாட்சி அமைப்பாகச் செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தைத் திருவாரூரில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தில் ஒரு துறையாக மாற்றுவதை, எக்காரணம் கொண்டும் தமிழர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. மத்திய அரசின் இம்முயற்சியைத் தமிழ்கூறும் நல்லுலகம் நிச்சயம் மன்னிக்காது.

 

தமிழ்மொழியைத் தேசிய மொழியாக்க, மத்திய ஆட்சி மொழியாக்க, சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்க எவ்வித முயற்சியும் எடுக்காத மத்திய பாஜக அரசு, இந்தியாவின் பல தேசிய இன மொழிகளைப் பின்னுக்குத்தள்ளி, சமஸ்கிருதத்தையும் இந்தியையும் மட்டும் பிடித்துத் தொங்கிக்கொண்டு, செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை ஒரு பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இணைத்து, தமிழுக்கு இருக்கும் தன்னாட்சி அந்தஸ்தைச் சீர்குலைக்க முயற்சி செய்வது, தமிழக மக்களின் தூய உணர்வைக் கொச்சைப்படுத்துவது மட்டுமல்ல, தமிழறிஞர்களின் நெஞ்சத்தில் ஈட்டிகொண்டு கீறும் செயலுமாகும்.

 

ஆகவே, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தைத் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துக்கு மாற்றும் முயற்சியை மத்தியில் உள்ள பாஜக அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

 

மத்தியில் உள்ள பாஜக அரசும், அதற்கு மறைமுகமாகத் திரைமறைவில் உதவும் அதிமுக-வின் ‘குதிரைப் பேர அரசும்’ செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் தன்னாட்சித் தகுதியை சூறையாடும் போக்கில் செயல்படுவதை நிறுத்திக்கொண்டு, இந்நிறுவனம் முழுநேர இயக்குநர் மற்றும் முழு நிதியுதவியுடன், தமிழாராய்ச்சிப் பணிகளில் தன்னாட்சி அதிகாரத்துடன் தொடர்ந்து ஈடுபடுவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், கிளர்ச்சி வழியைத் திறந்துவிட்டுத் தூண்ட வேண்டாமென்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” – இவ்வாறு தனது அறிக்கையில் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.