இடைத்தேர்தல் சீட் பற்றி மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார்! எப்படியானாலும்  தி.மு.க.வுக்காக ம.தி.மு.க. உழைக்கும்!: வைகோ  

20 தொகுதி இடைத்தேர்தலில் தங்களுக்கு தி.மு.க போட்டியிட வாய்ப்பு அளித்தாலும் இல்லாவிட்டாலும் அக்கட்சியின் வெற்றிக்கு பாடுபடப்போவதாக மதிமுக பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,  சாத்தூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொடார். அப்போது அவர் பேசியதாவது:

“திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான அணிதான் புதுவை உள்ளிட்ட நாற்பது நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறப்போகிறது. அதே போல இருபது  சட்டமன்ற தொகுதிகளுக்கு பிப்ரவரியில் இடைத் தேர்தல் வந்தாலும் தி.மு.க. கூட்டணியே வெற்றி பெறும். நாடாளுமன்ற தேர்தலோடு இத்தொகுதிகளுக்குத் தேர்தல் நடந்தாலும் தி.மு.க. கூட்டணியே வெற்றி பெறும்.

இந்த இருபது தொகுதிகளுடைய களப்பணிகளில் மதிமுக முழுமையாக இறங்கி பணியாற்ரும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ம.தி.மு.க. பணிக்குழு அமைத்துவிட்டால், திமுகவுக்கு வேலை எளிதாகிவிடும்.

இந்த 20 தொகுதிகளில் யார் வேட்பாளர்? தோழமைக் கட்சிகள் போட்டியிடுமா? இதையெல்லாம் திமுக தலைமையே முடிவு செய்யும்.  அதைப்பற்றியெல்லாம் பேசுவதற்கு இங்கு நான் வரவில்லை.

இந்த 20 சட்டமன்ற இடைத்தேர்தல் அனைத்துத் தொகுதிகளிலும் திமுகவே போட்டியிடுமா அல்லது தோழமைக் கட்சிகளுக்கு சில தொகுதிகளை விட்டுக்கொடுக்குமா என்பதையெல்லாம் திமுக தலைமை முடிவு செய்யும்.

ஆனால், 20 தொகுதிகளிலும் தேர்தல் பணிகளில் மதிமுக தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளும்.

பெரும் பண வெள்ளத்தை எதிர்த்து நிற்க வேண்டிய சூழல் நமக்கு இருக்கிறது.  ஓட்டுக்கு ஆயிரமோ, ரெண்டாயிரமோ, ஐயாயிரமோ அ.தி.மு.க.வினர் தரலாம். ஆனால், அவர்கள் எவ்வளவு கொடுத்தாலும் சரி வெற்றிபெற முடியாது.  பர்கூர் தொகுதியில் வீட்டுக்கு ஒரு பசுமாடு கொடுத்த ஜெயலலிதா தோல்வியைத்தான் சந்தித்தார்” என்று வைகோ பேசினார்.

#MKStalin #decides #seatsharing #byelection #MDMK #Working #DMK: #vaiko