மு.க.ஸ்டாலின் மிசா கைதிதான்! பாஜக ஆதரவாளர் துக்ளக் குருமூர்த்தி தகவல்

சென்னை:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா கைதிதான் என பாஜக ஆதரவாளர் ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்து உள்ளார்.

ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை என்று நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் பாண்டியராஜன் பேசியிருந்தார். அவரின்  கருத்துக்கு ஸ்டாலின், கடும் கண்டனம் தெரிவித்த நிலையில்,  “சுமார் 44 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தியாக வரலாற்று நிகழ்வுகளை, அரசியல் லாப நோக்கில், வக்கிர எண்ணத்துடன் திருத்தி எழுத மாஃபா பாண்டியராஜன் எத்தனிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்”  இதையடுத்து, அமைச்சரின் வீடு உள்பட பல இடங்களில் மா.பாண்டியராஜனுக்கு எதிராக திமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது.

அதையடுத்து, ஸ்டாலின் மிசாவில் தைகதாகவில்லை என்பதை விரைவில் நிரூபிப்பேன் என்று மா.பா. கூறியிருந்த நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறித்த ஆதாரங்களை  தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் புதுக்கோட்டை அப்துல்லா வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில், பாஜக ஆதரவாளரான குரூமூர்த்தி, தனது துக்ளக் பத்திரிகையில்,  மு.க.ஸ்டாலின் மிசா கைதிதான் என தெரிவித்துள்ளார்.

துக்ளக் பத்திரிகையில் வரும் கேள்வி பதில் பகுதியில், வாசகர் ஒருவர் எழுப்பியிருந்த, ஸ்டாலின் மிசா கைதியா..? முரசொலி கட்ட இடம் பஞ்சமி நிலமா? அண்ணா அறிவாலய இடம் அனாதை இல்லம் இடமா? என்ற விவகாரங்கள் விவாதிக்க்கப்படுவது பற்றி? என கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி,  ’’ஸ்டாலின் மிசா கைதியாக சிறையில் இருந்தது உண்மை. அது எனக்கே தெரியும். அவசர காலம் முடிந்து நடந்த 1977 தேர்தலில் அவருடன் இணைந்து முரசொலி மாறனுக்கு நான் பிரசாரம் கூடச் செய்திருக்கிறேன். எனவே அவர் மிசா ஸ்டாலின் தான்.

ஆனால் முரசொலி கட்டிடம் பஞ்சமி நிலமா? அண்ணா அறிவாலயம் அனாதை இல்லமா என்பது எனக்குத் தெரியாது’’எனத் தெரிவித்துள்ளார்.

துக்ளக்கில் வெளியான அந்தப்பக்கத்தை திமுக ஆதரவாளர்கள் சமூகவலைதள பக்கங்களில் வைரலாக்கி வருகின்றனர்.