சென்னை:

நீட்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ் . படிப்புக்கு மாணவர்களை சேர்க்கும் தமிழக அரசின் முடிவுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் அருகே சீரமைக்கப்பட்ட குளத்தை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். பிறகு  செய்தியாளர்களிடம் பேசிய அவர், தெரிவித்ததாவது:

 

“நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ் சேர்க்கை நடத்த இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருப்பது கண்டனத்துக்குரியது. நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதில் அடைந்த தோல்வியை மறைக்கவே அரசு திசை திருப்பும் வகையில் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கறது. தமிழக மாணவர்களை ஏமாற்றும் மோசடிச் செயலை ஏற்க முடியாது.  பதவியை காப்பாற்ற தமிழக நலன்களை மத்திய அரசிடம் அடகு வைக்கிறது தமிழக அரசு.

நீட் தேர்வு கிராமப்புற மாணவர்கள், மாநில உரிமைகளுக்கு எதிரானது.  சிபிஎஸ்இ பிரிவினருக்கு 15% இடங்கள் எந்த அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளன” என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின், “மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் தவறான செயல்களில் ஈடுபட வேண்டாம்” என்று தமிழக அரசை வலியுறுத்தினார்.