கருணாநிதி நினைவிடத்தில் மக்களவை தொகுதிகளின் திமுக வேட்பாளர் பட்டியலை வைத்து வணங்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை:

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் வேட்பாளர்கள் பட்டியலை வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வணங்கினார்.


மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், தோழமை கட்சிகளுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.  மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

அதன்படி, வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நீலகிரி, பொள்ளாச்சி, திண்டுக்கல், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

இந்நிலையில், திமுக வேட்பாளர் பட்டியலை அறிவிக்கும் முன்பு, சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் நினைவிடத்தில் வேட்பாளர்கள் பட்டியலை வைத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வணங்கினார்.

பின்னர் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனிடம் வேட்பாளர் பட்டியலை அளித்து மு.க. ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.

கருணாநிதி மறைந்தபின் திமுக சந்திக்கும் முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.