தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆக வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசத்துடன் பேசினார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் மருதுகணேசை ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரித்துள்ளன.  இக் கட்சிகளில் மார்க்சிஸ்ட் கட்சி, தி.மு.க. மேடையில் ஏறாமல் தனித்து மேடையேறி ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்று ஆர்.கே. நகர் தொகுதிக்கு உட்பட்ட காசிமேட்டில் தி.மு.க வேட்பாளர் மருதுகணேசை ஆதரித்து தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க செயல்தலைவர் மு.க. ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், வி.சி.க. தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.

வைகோ பேசும்போது ‘’திராவிட இயக்கத்தை வீழ்த்த வேண்டுமென்று திட்டமிடுகிற மதவாக சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.  திராவிட இயக்கத்தின் ஈட்டிமுனையாக உள்ள திமுகவை எவராலும்ம் வீழ்த்த முடியாது.  இந்தியா என்பது பல தேசிய இனங்களை கொண்ட நாடு. மதச்சார்பின்மையே இந்த நாட்டின் முதுகெலும்பு.   மதசார்பின்மையை நசுக்க நினைத்தால் இந்திய ஒருமைப்பாடு சிதைந்து போய்விடும்.

சுதந்திர தினத்தில் தேசிய கொடியை முதல்வர்கள் ஏற்றும் உரிமையை பெற்று தந்தவர் கலைஞர்.  வரம்புகளை மீறி மாநில அரசு அதிகாரத்தில் ஆளுநர் புரோகித் தலையிட்டு வருகிறார்.   அவரது அத்துமீறல்கள் மாநில உரிமைகளூக்கு, ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட சவாலாகும்.  அவரது அத்துமீறலை கண்டித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பை வரவேற்கிறேன்.

இந்த தேர்தல் களத்தில் பணம் கொடுக்கப்படுகிறது என்று ஊடகங்களில் செய்தி வெளியாகின்றது. …89 கோடி ரூபாய் மந்திரி வீட்டிலே புள்ளிவிபரத்தோடு கிடைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பிறகு ஏன் கொடுக்க மாட்டார்கள்?

ஆனால், அதையும் தாண்டி மக்கள் நெஞ்சிலே குமுறுகின்ற ஆத்திரம்  தமிழகத்தை காக்க வேண்டும் என்கிற எண்ணம் உதயசூரியனை வெற்றி பெற வைக்கும்” என்று வைகோ பேசினார்.