சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான கட்சி ஒரு அனுதாபம்கூட தெரிவிக்காமல், அவரது மரணக்குழி ஈரம் காய்வதற்குள் அடுத்த கட் அவுட்டு அனுமதி கேட்டு நீதிமன்றம் ஓடுகிறார் முதல்வர் என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 12ம் தேதி அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் இல்லத் திருமணத்திற்காக வைக்கப்பட்ட பேனர் சாலையில் சென்ற இளம்பெண் சுபஸ்ரீ மீது விழுந்து அவர் நிலைத்தடுமாறி விழுந்ததில் லாரியில் சிக்கி உயிரிழந்தார். நாடெங்கும் அதிர்வலையை ஏற்படுத்திய விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் கடுமையான கண்டனத்தை பதிவு செய்தது. இது தொடர்பான நடவடிக்கைக்கு கடும் உத்தரவுகளை பிறப்பித்தது.

வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கும் தனியாக விசாரணையில் உள்ளது. சம்பந்தப்பட்ட அலட்சியமாக செயல்பட்ட காவல்துறை, மாநகராட்சி அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஜெயகோபால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் சீன அதிபர் இந்தியா வந்து பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த சந்திப்பு மாமல்லபுரத்தில் நடப்பதால் வழியெங்கும் பேனர் வைக்க அனுமதி கேட்டு தமிழக, மத்திய அரசுகள் உயர் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டுள்ளன.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை மேற்கொண்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “அங்கீகாரம் இல்லாமல் பேனர் வைத்து அப்பாவிப் பெண் சுபஶ்ரீ உயிரழப்புக்குக் காரணமான அதிமுக கட்சி,அந்த உயிருக்கு ஒரு அனுதாபச் செய்தி கூட தரவில்லை #subashree

அந்த மரணக்குழியின் ஈரம் காயும் முன், அடுத்த கட்அவுட்டுக்கு அனுமதி வாங்க உயர்நீதிமன்றத்திற்கு ஓடி இருக்கிறார் முதல்வர் எடப்பாடி!
இந்த வேகத்தையும் அக்கறையையும், மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் காட்டியிருந்தால் பாராட்டலாம்
வெட்டி பந்தாக்களிலும், போலிக் கெளரவங்களிலும் காலம் கடத்த நினைப்பதைத் தவிர, முதலமைச்சரின் செயல்பாடுகளில் சொல்லிக் கொள்வது மாதிரி எந்தச் சாதனையும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.