தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க தயார் என கேரள முதல்வர் அறிவித்தமைக்கு, அலைப்பேசி மூலம் தனது நன்றியை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். பல பகுதிகளில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் நிலை இருந்தபோதும், குடிநீர் தட்டுப்பாடு தமிழகத்தில் எங்கும் இல்லை என அரசு தரப்பு விளக்கம் அளித்து வருகிறது.

இத்தகைய சூழலில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழக முதல்வரிடம் கேரள அரசு தரப்பில் தமிழகத்திற்கு நீர் தர தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். ஆனால் கேரள அரசு தரப்பின் இந்த உதவியை தமிழக முதல்வர் மறுத்துவிட்டதாக, கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில் பதிவு மூலம் வெளிப்படுத்தியுள்ளார். ஏனெனினும் எப்போதும் தமிழகத்திற்கு உதவ தாம் தயாராக இருப்பதாகவும் அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழகத்திற்கு குடிநீர் வழங்க கேரள அரசு முன்வந்திருப்பதற்கு தனது நன்றியை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கேரள முதல்வருக்கு அலைப்பேசி மூலம் அழைப்பு விடுத்துள்ள மு.க ஸ்டாலின், தமிழக மக்களின் குடிநீர் பிரச்சினையை சமாளிப்பதற்கு தண்ணீர் வழங்க தயார் என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியை தாம் பார்த்ததாகவும், அதற்கு தன் நன்றியை தெரிவித்துக்கொள்வதோடு, எதிர்கட்சித் தலைவர் என்கிற முறையில் தமிழகத்திற்கு தண்ணீர் தந்து உதவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அத்தோடு, இரு மாநிலங்களுக்கும் இடையில் நிலவிவரும் நல்லுறவின் அடிப்படையில் தமிழக மக்களின் தாகத்தை தீர்க்க கேரள மாநில முதல்வர் அளிக்க முன்வந்துள்ள தண்ணீரை தமிழக அரசு ஓரீரு நாட்களில் ஆலோசித்து ஏற்றுக்கொள்ளும் என தான் நம்புவதாகவும் கேரள முதல்வரிடம் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.