சென்னை: திமுக எம்எல்ஏக்களால் சட்டமன்ற குழு தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அதற்கான கடிதத்துடன்,  ஆட்சி அமைக்க அனுமதிகோரி இன்று ஆளுநர் பன்வாரிலாலை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும் வெற்றிபெற்ற திமுக தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறது. இதையடுத்து,  நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கூட்டத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கூட்டணி எம்.எல்.ஏக்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

மொத்தம் துரைமுருகன், டி.ஆர். பாலு, கே.என். நேரு, பொன்முடி, எ.வ. வேலு, ஆர்.எஸ். பாரதி உள்ளிட்ட 133 எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர்.  இக்கூட்டத்தில் திமுக சட்டமன்றக் கட்சித்தலைவராக மு.க ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து,  இன்று  ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமைகோருகிறார் ஸ்டாலின். அதனைத்தொடர்ந்து 7ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் தமிழக முதலமைச்சராக மு.க ஸ்டாலின் பதவியேற்கவுள்ளார்.

7ஆம் தேதி காலை ஆளுநர் மாளிகையில் திறந்தவெளியில் , கொரோனா பரவல் தடுப்பு கருதி ஆ குறைந்த அளவு பங்கேற்பாளர்களுடன் எளிமையாக பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் கலந்துகொள்ள புதிய சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாகவும், அதிகபட்சமாக  சுமார் 300 பேர் வரை மட்டுமே விழாவில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.