ராஜஸ்தானில் ஒரே பேருந்தில் ராகுலுடன் மு.க.ஸ்டாலின் பயணம்

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் வெற்றி வாகை சூடிய காங்கிரஸ் கட்சி, இன்று அரியணை ஏறியது.

மாநில முதல்வராக மூத்த தலைவர் அசோக் கெலாட்டும், துணைமுதல்வராக இளைய தலைவர் சச்சின் பைலட்டும் இன்று பதவி ஏற்றனர்.

இந்த பதவி ஏற்பு விழாவுக்கு சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட முக்கிய தலைவர்கள் ஒரே பேருந்தில் பயணம் செய்தனர்.

நேற்று திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் திருவுருவ சிலை திறப்பு விழாவுக்கு வருகை தந்திருந்த சோனியா, ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் முன்னிலையில், ராகுல்காந்திதான் அடுத்த பிரதமர் என்று ஸ்டாலின் பேசியது, பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இன்று காங்கிரஸ் முதல்வர்கள் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள விடுத்த காங்கிரஸ் தலைவர்கள் அழைப்பை ஏற்று, ஸ்டாலின் தனி விமானம் மூலம் ராஜஸ்தான் பயணமானார்.

இன்று காலை ராஜஸ்தான் மாநில முதல்வர் பதவி ஏற்பு விழா ஜெய்ப்பூரில் நடைபெற்றது. அதில்  பங்கேற்பதற்காக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஒன்றாக பயணம் செய்தனர்.

மேலும், அதே பேருந்தில், சரத்பவார், திமுக எம்.பி. டிஆர். பாலு உள்பட எதிர்க்கட்சி தலைவர்களும் பயணமானார்கள்.