ஆசிரியர்கள் போராட்ட களத்தில் மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு

சென்னை:

‘சமவேலைக்கு சம ஊதியம்’ வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று 3வது நாளாக ஆசிரியர்கள் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டிபிஐ வளாகத்தில் நடைபெற்று வரும் இந்த போராட்டக் குழுவினரை சந்திக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக தலைவர் டிடிவி தினகரன் சென்றிருந்தனர்.

அப்போது இரு தலைவர்களும் எதிர்பாராத விதமாக சந்தித்து பேசிக்கொண்டனர். இது பரபரப்பாகி உள்ளது.

ஊதிய கமிஷன் முரண்பாடு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் கடந்த 3 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் இன்று 3வது நாளை எட்டிய நிலையில், பல ஆசிரியைகள் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மீதமுள்ளவர்கள் தொடர்ந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக  கல்லூரி சாலையில் உள்ள டிபிஐ வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது.

இந்த நிலையில், போராட்டக்கார்களை சந்திக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

அதேவேளையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  ஆசிரியர்களை சந்திக்க  டிடிவி தினகரனும் வந்தார். இதன் காரணமாக இரு தலைவர்களும் நேருக்கு நேர் சந்திக்கும் சூழல் ஏற்பட்டது. அதையடுத்து, இருவர்களும் நலம் விசாரித்துக்கொண்டனர். இது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஏற்கனவே இரு தலைவர்களும் ரகசியமாக சந்தித்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், அதை மறுக்காமல், இருவருமே ஒருவரை மாற்றி ஒருவர் குற்றம் சாட்டி வரும் நிலையில், இன்றைய திடீர் சந்திப்பும் பல்வேறு யூகங்களை எழுப்பி உள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

You may have missed