சென்னை

மிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  இந்திய அளவில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  நேற்று ஒரே நாளில் 1515 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  நேற்று முதல் முதலாகப் பாதிப்பு எண்ணிக்கை 1500 ஐ தாண்டி உள்ளது.  இந்நிலையில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ளதால் அது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் ஒரு அறிக்கை  வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மு க ஸ்டாலின், “தமிழ்நாட்டின் நிலைமை நாளுக்கு நாள் படுமோசமாக போய்க்கொண்டிருக்கிறது. நாள்தோறும் ஆயிரம், ஆயிரத்து ஐந்நூறு என நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர ஒரே நிலையிலோ, குறையும் அறிகுறியோ இப்போது இல்லை.

போதிய அளவில் பரிசோதனைகள் பரவலாகச் செய்யப்படாத சூழலிலேயே இந்த எண்ணிக்கை என்றால், உரிய முறையில் சோதனைகள் நடத்தப்பட்டால், நோய்த்தொற்று எண்ணிக்கை நம்ப முடியாத அளவுக்கு உயர்ந்திருக்கும் என்பதே உண்மை.

தலைநகர் சென்னை, ஒட்டுமொத்த மாநிலத்தையும் அச்சப்பட வைக்கும் நகரமாக மாறியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். ஒருவருக்கு யாரிடமிருந்து தொற்று பரவியது என்கிற தொடக்க நிலைத் தொற்று தெரியாத அளவில் சென்னையில் நாள்தோறும் பரவி வரும் தொற்று என்பது, சமூகத் தொற்று எனப்படும் கட்டத்தை எட்டியிருப்பதாக மருத்துவர்கள் கவலைப்படுகின்றனர்.

தமிழகத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. இறப்பு எண்ணிக்கையும் இருநூற்று ஐம்பதுக்கு மேல் சென்றுவிட்டது. கோவிட்-19 வைரஸ் தற்போது அதிக வீரியம் கொண்ட ‘க்ளேட் A3i’ ஆக உருமாறிப் பரவி வருகிறது என்கிற தகவல் மக்கள் அனைவரையும் மேலும் அச்சப்பட வைத்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வைக் கட்டாயம் நடத்தியே தீருவது என்கிற வறட்டுப் பிடிவாதமான முடிவு, மாணவ, மாணவியரின் உயிரை வைத்து ஆட்சியாளர்கள் விளையாடுகின்ற அபாயகரமான ஆட்டமாகும்.

கடந்த சில நாட்களாகக் குழந்தைகள், சிறுவர் – சிறுமியர், இளைஞர்கள் எனப் பல தரப்பினருக்கும் கரோனா தொற்று பரவி வருவதை அரசாங்கம் வெளியிடும் அறிக்கைகளிலிருந்தே அறிய முடிகிறது. அப்படிப்பட்ட நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது என்பது, மாணவ – மாணவியருக்கு மட்டுமின்றி, அவர்களுடைய பெற்றோர், குடும்பத்தினர், உடன்பிறந்தோர் உள்ளிட்ட அனைவருக்கும் தொற்று பரவ காரணமாகிவிடும் என்பதை மருத்துவர்களும் கல்வியாளர்களும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

‘எங்கள் பிள்ளைகளுக்குத் தொற்று வராது என்று இந்த அரசாங்கத்தால் உத்தரவாதம் தர முடியுமா? உங்களை நம்பி எப்படி தேர்வுக்கு அனுப்புவது? எதற்காக இந்த அவசரம்? கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு பொதுத் தேர்வை நடத்தினால் குடியா முழுகிவிடும்?’ என மாணவர்களின் தாயார் ஒருவர் பதறப் பதறக் கேட்கின்ற காணொலி, சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

 எதிர்க்கட்சியினர் ஆலோசனை சொன்னால், இவர்கள் என்ன மருத்துவர்களா? என்று ஏகடியம் பேசிய எடப்பாடி பழனிசாமி அரசு, சென்னையில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை நியமித்திருக்கிறதே அவர்கள் என்ன எம்பிபிஎஸ் எனும் மருத்துப் படிப்பு படித்தவர்களா? அல்லது விஞ்ஞானிகளா? லண்டன் – அமெரிக்கா சென்று உயர் மருத்துவப் பட்டம் வாங்கியவர்களா? என மக்கள் கேட்கிறார்கள்.

‘சொந்தப் புத்தியும் இல்லை; சொல் புத்தியும் இல்லை’ என்பதுபோல நிர்வாகத் திறனற்ற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, கரோனா தொற்றுத் தடுப்பில் முற்றிலுமாக ‘ஃபெயில்’ ஆகியுள்ள நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்கள் ‘பாஸா – ஃபெயிலா’ என்பதையறிவதற்காக பொதுத் தேர்வு நடத்துவதில் அவசரம் காட்டுவது, அதன் அக்கறையற்ற செயல்பாட்டையே எடுத்துக் காட்டுகிறது.

ஹால் டிக்கெட் வாங்குவதற்குப் பேருந்துகள் இயக்கப்படும் என்ற அறிவிப்பிலிருந்து பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகள் என அரசு சொல்கின்ற அனைத்துமே தொற்றுப் பரவலுக்கு வலிந்து இடமளிக்கின்ற செயல்பாடுகளேயாகும். கிராமப்புற ஏழை மாணவர்கள் – அரசுப் பள்ளியில் பயில்வோர் எனப் பலரும் போதிய தகவல் தொழில்நுட்ப வசதிகள் இல்லாத நிலையில், அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தி பாடம் சொல்லிக் கொடுக்கிறோம் என்பது பாகுபாட்டை வளர்க்கின்ற, பச்சை ஏமாற்றுத்தனமாகும்.

‘சிரம் அறுத்தல் வேந்தனுக்குப் பொழுதுபோக்கும் சிறிய கதை! நமக்கோ உயிரின் வாதை!’ என்று பாரதிதாசனின் கவிதை வரிகள் மாணவர்களுக்குச் சொல்லித் தரப்படுகின்றன. அதன் பொருளை தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் ஆட்சியாளர்கள்தான். மக்கள் நலன் பற்றியும் சிந்திக்காமல், மாணவர்களின் எதிர்காலம் பற்றியும் கவலைப்படாமல், உயிரைப் பறிக்கும் நோய் வளர்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்திக் கொண்டிருக்கும் அதிமுக அரசு, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பி, மாணவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எவ்வித ஆபத்தும் இல்லை என்கிற நம்பிக்கையான, பாதுகாப்பான நிலை உருவான பிறகு தேர்வை நடத்திக் கொள்ளலாம்.

ஆட்சியாளர்கள் தங்களின் மறைமுக ஆதாயங்களுக்காக, மாணவர்களின் உயிருடன் விளையாட வேண்டாம் என எச்சரிக்க வேண்டியது முக்கிய எதிர்க்கட்சியின் கடமை” என வலியுறுத்தி உள்ளார்.