மதுரை: ஸ்டாலின் எப்போதுமே முதல்வராக வரவே முடியாது என்றும் தமது தொண்டர்கள் விடவேமாட்டார்கள் என்றும் முக அழகிரி கூறி உள்ளார்.

புதிய கட்சி துவங்குவது குறித்து தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்களுடன், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி மதுரையில் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது திரண்டிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:

பல்வேறு இடங்களில் திமுக வெற்றி பெற உழைத்தேன். இது தான் துரோகமா? திருமங்கலம் தேர்தல் வெற்றியை இந்தியாவே உற்று நோக்கியது. அந்த  இடைத் தேர்தலில் ஒருவருக்கும் பணம் தரவில்லை. கலைஞர் உழைப்பு தான் திருமங்கலம் வெற்றிக்கு காரணம். திருமங்கலம் இடைத் தேர்தலில் வெற்றி பெறாமல் இருந்திருந்தால் திமுக ஆட்சி கேள்விக்குறியாக இருக்கும்.

திமுகவில் பதவி கிடைக்கும் என்று ஒரு நாளும் நான் எதிர்பார்த்ததில்லை. கட்சிக்காக மட்டுமே உழைத்தேன். கலைஞரின் மறைவுக்கு பிறகு திமுகவின் தலைவர் நீங்கள் தான் என்று ஸ்டாலினிடம் கூறியவன் நான். ஸ்டாலினுக்கு கலைஞரிடம் பொருளாளர் பதவியை கேட்டு பெற்று தந்தவன் நான்.

திமுக வெற்றி பெற உழைத்தது தான் துரோகமா? கட்சி அறிவிப்போ அல்லது வேறு எந்த அறிவிப்போ, தொண்டர்களாகிய நீங்கள் தயாராக இருக்க வேண்டும். நான் எனது முடிவை விரைவில் அறிவிப்பேன். தொண்டர்களுக்கு எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.

ஸ்டாலின் முதல்வராக வரவே முடியாது. எனது தொண்டர்கள் விடவே மாட்டார்கள். அதற்கான நான் முதல்வராக வேண்டும் என்று விரும்பவில்லை. தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை வற்புறுத்தி கொடுத்ததால் ஏற்றுக்கொண்டேன். எத்தனையோ பேரை அமைச்சராக்கியுள்ளேன். ஆனால் ஒருவருக்கும் நன்றி இல்லை.

திமுகவிற்காக உழைத்த என்னை ஏன் கட்சியில் இருந்து நீக்கினார்கள் என எனக்கு தெரியவில்லை. திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு எப்போது கட்சியில் சேர்ப்பீர்கள் என கலைஞரிடம் கேட்டேன், இவர்களின் ஆட்டம் அடங்கட்டும், பொறுத்திரு என்று கூறினார்.

ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவியை தர கலைஞர் என்னுடன் ஆலோசித்த போது தாராளமாகக் கொடுங்கள் என்று கூறினேன். பல நேரங்களில் பல சோதனைகள் நேரலாம், அதை கடந்து வந்திருக்கிறோம். வைகோ வெளியேறியபோது, ஒரு திமுக தொண்டன் கூட கட்சி மாறவில்லை.

கலைஞரை மீண்டும் நினைவுபடுத்த வேண்டும். தொண்டர்களான உங்களுக்காக உழைக்க ஒருவன் உள்ளான் என்றால் அது அழகிரி தான். அவருக்கு இருக்கும் ஞானம் யாருக்கு இருக்கிறது? அவரை மிஞ்சிவிட்டதாக ஸ்டாலின் நினைத்து கொண்டிருக்கிறார்.  கலைஞரை போன்று ஒருவர் பிறக்க முடியாது. அவரையே மறந்துவிட்டு அரசியல் நடத்துகிறார்கள். கலைஞரை மீண்டும் நாம் நினைவுபடுத்த வேண்டும் என்று பேசினார்.