ஜெயலலிதா மறைவு குறித்து மு.க.ஸ்டாலினின் உருக்கமான பதிவு! (மீள் பதிவேற்றம்)

சென்னை:

மிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளருக்கும் இருந்து வந்த ஜெயலலிதா கடந்த 2016ம்ஆண்டு டிசம்பர் 5ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இன்று அவரது 2வது நினைவு தினமாகும்.

இதையொட்டி அதிமுக சார்பில் அவரது நினைவிடத்துக்கு மவுன ஊர்வலமும்,  அஞ்சலியும் செலுத்தப்பட்டது. மேலும் தமிழகம் முழுவதும் அதிமுகவினர்  ஜெ. படத்துக்கு மரியாதை செலுத்தியும், ஏழைகளுக்கு மதிய உணவு வழங்கியும் அவரது நினைவுநாளை அனுசரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 2016ம் ஆண்டு ஜெயலலிதா மறைந்தபோது, அவர் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம் தற்போது, ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி மீள் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

திமுகவுக்கு எதிரான கருத்துக்கொண்ட ஜெயலலிதா குறித்து நாகரிகமான முறையில் ஸ்டாலின் தனது கருதை பதிவிட்டிருந்தார். அதில்,

என் காலத்தில் எனக்கு தெரிந்த தலைவர்களில் எனக்கு உடன்பாடில்லாத ஒரு தலைவருக்காக முதன் முறையாக என்னை மீறி அழுது கொண்டிருக்கின்றேன்.

இத்தனைக்கும் அவர் எனக்குப் பிடித்த தலைவர் இல்லை தான்.அப்படியிருந்தும் மனம் கசிகிறது.

ஆனால் அவர் ஒரு பெண், தனித்து நின்று அரசியலில் வென்று காட்டியவர். எதிரிகளை தயவு தாட்சண்யமின்றி பந்தாடியவர்.

தனது பிடிவாத குணத்தையும், நினைத்ததை செய்வதை யாருக்காகவும் தளர்த்திக் கொள்ளாதவர். இந்த குணங்கள் அவரிடம் இல்லாதிருந்தால் ஒருவேளை எனக்கும் அவர் பிடித்த தலைவராக இருந்திருக்கலாம். ஆனால் …

அந்த குணங்கள் அவரிடம் இல்லாதிருந்தால் அரசியலில் இருந்து அவரை எப்போதோ ஒழித்துக் கட்டியிருப்பார்கள். அவரைப் பாராட்டவோ, பரிகசிக்கவோ பல விஷயங்கள் நம்மிடம் இருக்கலாம். அதையெல்லாம் மீறிய ஒரு பரிவு அவர்மீது ஏற்படுகிறதென்றால் … அது எதனால் ஏற்படுகிறதென்று விளக்கம் சொல்லத் தெரியவில்லை.

நம்மோடு இத்தனை காலம் வாழ்ந்த ஒரு பெண்மணி மிகுந்த அவஸ்தைகளோடு, அரசியலோடும் சொல்லப்படாத ரகசியங்களோடு, மோசமாக பாதிக்கப்பட்ட நிலையிலும் தன்னை நேசிக்கும் மக்களை கடைசியாக பார்க்க முடியாமல், அவர்களுக்கு எந்த செய்தியும் சொல்ல முடியாமல் போராடி மரணமடைந்தது மிகுந்த துயரத்தை தருகிறது.

அவருக்கு எது நல்லதோ அதை இறைவன் வழங்கட்டும் என்று பிரார்த்திப்பதைத் தவிர வேறொன்றும் சொல்லத் தெரியவில்லை.”

-முகஸ்டாலின்

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

கார்ட்டூன் கேலரி