குறித்த காலத்தில் படிப்பை முடிக்காதவர்களுக்கு மத்தியபிரதேச மாநில திறந்தவெளி கல்வி வாரியம், சிறப்பு தேர்வுகளை நடத்துகிறது. இந்த வரிசையில் பத்தாம் வகுப்பு சிறப்பு தேர்வு கடந்த 14 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது.

தமோ மாவட்டம் பதரியா தொகுதியில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் எம்.எல்.ஏ. ராம்பாய் என்பவரை அங்குள்ள தாமோ நகரில் உள்ள ஜே.பி.வி. பள்ளியின் தேர்வு மையத்தில் காண நேரிட்டது.

அற்புதமான பேச்சாற்றல் கொண்ட அந்த எம்.எல்.ஏ. பரீட்சை ஏற்பாடுகளை கண்காணிக்க வந்திருக்கலாம் என தேர்வு எழுத வந்திருந்த பிற மாணவர்கள் நினைத்தனர்.

ஆனால் பரீட்சை ஹாலில் சக மாணவர்களுடன் அமர்ந்து ராம்பாய் தேர்வு எழுதிய போது தான் ‘எம்.எல்.ஏ.வும் நம்ம ஆளு தான்’ என மற்றவர்களுக்கு தெரிய வந்தது.

8 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ராம்பாயால் அதற்கு மேல் படிக்க இயலவில்லை.

இந்த நிலையில் அரசியலில் நுழைந்து சட்டமன்ற உறுப்பினராகி விட்ட ராம்பாயை அவரது, மகள் கட்டாயப்படுத்தி பத்தாம் வகுப்பு தேர்வு எழுத வைத்துள்ளார்.

“தினமும் வகுப்பு பாடங்களை பல மணி நேரம் படித்தேன், எனக்கு என் மகள் தான் ஆசிரியராக இருந்து பாடங்களை சொல்லிக் கொடுத்தாள்” என்கிறார், ‘மாணவி’ எம்.எல்.ஏ.வான ராம்பாய்.

– பா. பாரதி