எம்எல்ஏ மிரட்டலுக்கு பயந்தார் முதல்வர்! கல்குவாரி மூட உத்தரவு!

சென்னை,

அணி மாறுவேன் என்று மிரட்டிய கோவை எம்எல்ஏவுக்கு பயந்து உடனடியாக அவரது கோரிக்கை நிறை வேற்றப்பட்டது.

கோவை சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ்.  இவர் சசி அதிகமுக அணியில் இருக்கிறார்.

இவரது தொகுதியில் உள்ள சுல்தான்பேட்டை பெரிய குயிலி என்ற குவாரியில் பாறை உருண்டு விழுந்து இரண்டுபேர் பரிதாபமாக மரணம் அடைந்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கனகராஜ் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து பார்வையிட்டார். பின்னர் அந்த பகுதி பொதுமக்களுடன் இணைந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது,, விபத்து நடைபெற்ற  கல்குவாரியில் 400 அடி வரை குழி தோண்டி கல் எடுக்கும் பணி நடந்து வருகிறது. இங்கு வேலை பார்த்த 2 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். முறையான பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்காமல் தொழிலாளர்கள் பணி செய்ய அனுமதிக்கப்பட்டதால் தான் விபத்து நிகழ்ந்துள்ளது என்றும்,

இதுவரை,  இந்த குவாரியை  கனிம வளத்துறை உதவி இயக்குனர், தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரி யாரும் இங்கு வந்து ஆய்வு செய்யவில்லை என்று குறை கூறினார். மேலும்,  விபத்து என்று வழக்குப்பதிவு செய்து பலியான வர்களின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி கொடுத்து அனுப்பி விட்டனர் என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும், அதிகாரிகள் மற்றும் போலீசார் லஞ்சம் பெற்றுக்கொண்டு தொழிலாளர்கள் விபத்தில் இறந்ததாக பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனர், இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்காத அரசு  அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,

10 நாட்களுக்குள் குவாரி உரிமையாளர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தான்  எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து விலகி வேறு அணிக்கு (ஓபிஎஸ்) செல்வேன் என்று முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமிக்கு நேரடியாக மிரட்டல் விடுத்தார். மேலும் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் மிரட்டினார்.

இதையடுத்து, எம்எல்ஏ கனகராஜின் கோரிக்கை உடனடியாக ஏற்கப்பட்டது. சுல்தான்பேட்டை பெரிய குயிலியில் உள்குவாரி உடனடியாக மூடும்படியும், குவாரியின் உரிமையை ரத்து செய்யும்படியும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதையடுத்து குவாரியின் உரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஒரு எம்எல்ஏ.வின் ஆதரவு மிரட்டலுக்கு பயந்து, மக்களுக்கு எதிரான செயலில் ஈடுபட்ட ஒரு நிறுவனத்தை மூட அதிரடி உத்தரவு பிறப்பிக்கும்போது,

தமிழகம் முழுவதும்  எத்தனையோ நிறுவனங்கள்.. உதாரணமாக நெல்லையில் உள்ள குளிர்பான நிறுவனங்கள் போன்ற விவசாயிகளுக்கு  விரோதமான நிறுவனங்களை மூட  தமிழக முதல்வர் உடனடி நடவடிக்கை எடுப்பாரா? என்று பொதுமக்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

மேலும், இதுபோல் ஒவ்வொரு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களும் மிரட்டல் விடுத்து, அந்தந்த தொகுதிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.