தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, ஆளுங்கட்சியான அ.தி.மு.க. இரு அணிகளாக உடைந்தது. இதனால்  சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஆளும்கட்சிக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில்  சசிகலா அணி எம்எல்ஏ-க்கள் கூவததூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். பிறகு தமிழக சட்டமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமைந்தது.

இந்த நிலையில், கூவத்தூரிலிருந்து தப்பித்து, ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு வந்த மதுரை தெற்குத் தொகுதி எம்எல்ஏ சரவணன், சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு, “எம்.எல்.ஏக்களுக்கு 10 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டது” என்று கூறியதாக ஒளிபரப்பானது.

இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்,  இந்த வீடியோ விவகாரம்குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். மேலும், சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு, உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக பதிலளிக்குமாறு சட்டப்பேரவைச் செயலாளர் பூபதிக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும்,  வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பதுகுறித்து சிபிஐ மற்றும் மத்திய வருவாய் புலணாய்வுத்துறை பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தது.