ராஞ்சி:

ஜார்கண்ட்டில் ஆதிவாசித் தம்பதிகளுக்கு எம்.எல்.ஏ முத்தத் திருவிழா நடத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்டுத்தியுள்ளது.

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி சார்பில் லித்திபரா தொகுதி எம்எல்ஏ சைமன் மாராண்டி நேற்று முன் தினம் இரவு ஆதிவாசித் தம்பதிகளுக்கு முத்தத் திருவிழா நடத்தினார். இதில் அக்கட்சியின் முக்கிய தலைவரான ஸ்டீபன் மாராண்டி கலந்து கொண்டுள்ளார்.

இந்தப் போட்டியில் 3 ஆதிவாசித் தம்பதிகள் பரிசு பெற்றுள்ளனர். இந்த செய்தி இன்று காலை உள்ளூர் செய்தித்தாள் ஒன்றில் வெளிவந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சைமன் மாராண்டி கூறுகையில், ‘‘ஆதிவாசி மக்களிடம் அன்பையும் நவீனத்துவத்தையும் உணடாகவே இந்த முத்தத் திருவிழா நடத்தப்பட்டது.

பொதுவாகவே ஆதிவாசி மக்கள் மிகுந்த தயக்கமும், கூச்ச சுபாவமும் உடையவர்கள். அதனைக் களையவே இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன்மூலம் தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும், விவகாரத்துகளைக் குறைக்கவும் உதவும்’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியை பாஜக விமர்சித்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் ரமேஷ் புஷ்கர் கூறுகையில், ‘‘ஆதிவாசி மக்களிடையே தயக்கத்தினைப் போக்குவதற்கு பல வழிகள் உள்ளது. ஆனால் இந்த செயல் கலாசாரத்தை கேலி செய்யும் வகையில் அமைநதுள்ளது’’ என்றார்.