ரஜினியின் உபதேசம் தமிழர்களுக்குத் தேவையில்லை – கொதிக்கும் தமிமுன் அன்சாரி

கிருஷ்ணகிரி: வடமாநிலங்களில் பசுவின் பெயரால் நடைபெற்ற கொலை வன்முறைகளைப் பற்றி பேசாத ரஜினிகாந்த், தற்போது குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களை வன்முறை எனப் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ரஜினியின் உபதேசம் தமிழர்களுக்குத் தேவையில்லை. என்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளார் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி.

மோடி அரசின் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற பிரமாண்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்த மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி இந்தக் கருத்தை தெரிவித்தார்.

“கடந்த 30 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு, குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து தன்னெழுச்சியான மக்கள் திரள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஜாதி, மதத்தை கடந்து, ஜனநாயகக் காப்பு போராட்டத்தில் கரம் கோர்த்திருப்பது மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

பீகார், கேரளா, மேற்குவங்கம், சத்தீஷ்கர் மற்றும் புதுச்ச‍ேரி ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் இச்சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என்று துணிச்சலாக அறிவித்ததை தமிழக முதல்வரும் பின்பற்ற வேண்டும்.

தமிழகத்தில் இச்சட்டத்தை அமல்படுத்த முயன்றால் மிகப்பெரிய போராட்டத்தை நடடித்துவோம். திமுக தலைமையேற்றும் நடத்தும் போராட்டத்தில் கலந்துகொள்ள எங்களுக்கும் அழைப்பு வந்துள்ளது.

அதில் விவசாயிகள், வணிகர்கள், திராவிட மற்றும் தமிழ் தேசிய அரசியல் அமைப்புகளைச் சார்ந்த அனைவரும் ப‍ஙகேற்க வேண்டும். ரஜினியின் உபதேசம் தமிழர்களுக்குத் தேவையில்லை” என்றார்.