சென்னை,

மிழகத்தில் அதிமுகவை சேர்ந்த முதல்வர் பன்னீர் செல்வத்துக்கும், தற்போது அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அதிமுக எம்எல்ஏக்களை சசிகலா தரப்பினர் பிணை கைதிகளாக தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

இது தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்தந்த தொகுதி மக்கள் அனைவரும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி வருகிறார்கள்.

இந்நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டார் ஓட்டல்களில் சிறை வைக்கப்பட்டிருப்பதற்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

இப்போதைய அரசியல் சூழ்நிலையில் ஓ.பன்னீர் செல்வம் முதல்-அமைச்சராக நீடிப்பதுதான் குழப்பத்தை தவிர்க்கும்.

சசிகலாவிற்கு ஒட்டு மொத்த மக்களும் எதிர்ப்பாகவே இருக்கிறார்கள். குழப்பம் இல்லாத அரசு நீடிக்க ஓ.பன்னீர்செல்வத்தை பதவியில் நீடிக்க விட வேண்டும்.

சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்பு ஒரு சில நாட்களாவது முதல்-அமைச்சர் பதவியில் இருந்து வரலாற்றில் தனது பெயரையும் பதிவு செய்திட வேண்டும் என்ற பதவி ஆசையில் சசிகலா செயல்படுவது எல்லோருக்கும் தெரிந்த வி‌ஷயம்தான்.

இந்த நேரத்தில் எம்.எல்.ஏ.க்களை சுதந்திரமாக நடமாடவும், சிந்திக்கவும் விடாமல் கைதிகள் போல் சிறை வைப்பது அராஜகத்தின் அடையாளம். மிகுந்த கண்டனத்துக்குரியது.

எத்தனை காலம் தான் இவர்களை சிறை வைக்க முடியும். மக்கள் எல்லோரும் சசிகலாவிற்கு எதிரான கருத்தோடு இருக்கிறார்கள். அதற்காக மக்களையும் சிறை பிடிப்பாரா?

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை சசிகலாவிற்கு ஆதரவு என்ற நிலைபாடு எதுவும் எடுக்கவில்லை. சிலருக்கு கருத்துக்கள் இருக்கும். இதை பேசி இருக்கலாம்.

ஆனால் காங்கிரஸ் மேலிடம் எதிர்மறையான கருத்துக்கள் எதையும் சொல்லவில்லை. ஓ.பன்னீர் செல்வம் தன்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்ததாக எப்போது கூறினாரோ அப்போதே கவர்னர் அழைத்து விசாரித்து முடிவு செய்திருக்க வேண்டும்.

இவ்வாறு காலம் தாழ்த்துவது அவர் கடமையில் இருந்து தவறியதாக ஆகி விடும். கவர்னர் உடனே தமிழகத்திற்கு வந்து முடிவு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.