குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக, பிப்.9ம் தேதி பேரணி: எம்என்எஸ் தலைவர் ராஜ் தாக்கரே அறிவிப்பு

மும்பை: குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக, வரும் 9ம் தேதி பேரணி நடத்தப்படும் என்று மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே அறிவித்து உள்ளார்.

மும்பையின் கோரேகான் பகுதியில் கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

வங்கதேசத்தினரையும், பாகிஸ்தானியரை வெளியேற்றும் இந்த சட்டத்தை ஆதரிக்கிறோம். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை ஆதரிக்க வரும் 9ம் தேதி மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா பேரணி நடத்தும்.

நாட்டில் நடத்தப்படும் எதிர்ப்பு அணிவகுப்புகளுக்கு பதில் அளிக்க வேண்டியது அவசியம். முஸ்லிம் சமூகத்தினர் பேரணி நடத்துகின்றனர்.

அந்த பேரணிகளில் எத்தனை பேர் இந்தியாவில் இருந்து வந்தவர்கள்? வெளியாட்களை ஆதரிக்கும் முஸ்லிம்களை நாம் ஏன் ஆதரிக்க வேண்டும்? என்றார்.

சில விஷயங்கள் தொடர்பாக உள்துறை அமைச்சர் அல்லது முதலமைச்சரை சந்திப்பேன். இந்தியாவில் முஸ்லீம் மதகுருமார்கள் மற்ற நாடுகளுக்குச் செல்கிறார்கள், அவர்கள் என்ன செய்வார்கள் என்பது யாருக்கும் தெரியாது, காவல்துறையினரால் கூட அங்கு செல்ல முடியாது என்றார்.

முன்னதாக நேற்றைய தினம், தாக்கரே தனது கட்சியின் புதிய கொடியை வெளியிட்டார். அந்த கொடி குங்குமப்பூ நிறத்தில் உள்ளது. அதன் நடுவில் ராஜ்முத்ரா (போர்வீரர் சத்ரபதி சிவாஜியின் காலத்தில் பயன்படுத்தப்பட்ட அரச முத்திரை) இடம்பெற்றுள்ளது.