“டெங்கு’ போலவே மக்களை அச்சுறுத்தும் ஒரு நோய், மலேரியா. இதைக் கண்டறிய சோதனைகள் பல இருக்கின்றன.

ஆனால் பரிசோதனை மையங்களில்  சோதிக்க  இருநூறு ரூபாயிலிருந்து ஐநூறு ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தவிர இந்த சோதனையின் முடிவு.. அதாவது, ஒருவருக்கு  மலேரியா இருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள  எட்டு மணிநேரம் வரை ஆகும்.

இந்த நிலையில்  கொல்கத்தா ஐஇஎம் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும்  நிலஞ்ஜன்டா, தேவப்பிரியா பால் மற்றும் ஐஐஇஎஸ்டி பேராசிரியர்கள் இணைந்து மலேரியா  பரிசோதிக்கும் செயலியை (மொபைல் ஆப்)  உருவாக்கியுள்ளனர்.

“ மலேரியா உள்ளதா என்பதை  பரிசோதிக்க மையம்  செல்ல வேண்டியதில்லை. பத்தே விநாடிகளில் இந்த ஆப் மூலம் தெரிந்துகொள்ள முடியும்” என்கிறார்கள் இதை உருவாக்கிய மாணவர்கள்.

மேலும் இவர்கள் தெரிவிப்பதாவது:

“முதலில் நுண்ணோக்கியுடன் கூடிய கருவியை  மொபைலில் பொருத்த வேண்டும். பிறகு  பாதிக்கப்பட்டவரின் ஒரு சொட்டு இரத்தத்தை அதில் விட வேண்டும். ஸ்மார்ட் மொபைலில்  உள்ள கேமரா அதனை படம் பிடித்து செயலிக்கு அனுப்பும். பிறகு 10 நொடிகளில் மலேரியா  இருக்கிறதா இல்லையா என்று  காட்டிவிடும்” என்கிறார்கள்.

இந்த செயலியை ஏற்று,  அதிகாரபூர்வமாக பரப்ப அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

இந்த செயலிக்கான நுண்ணோக்கியை தயாரிக்க 70 ரூபாய் மட்டுமே செலவு பிடிக்கும்.

ஆனால் சென்ற ஆண்டு, ஐஐடி, கோரக்பூரைச் சேர்ந்த மாணவர்கள் இது போன்ற ஒரு செயலியை உருவாக்கினர். ஆனால் மத்திய மாநில அரசுகள் அதைக் கண்டுகொள்ளவே இல்லை என்று குமுறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.