டில்லி

கொரோனாவால் தனிமைப்படுத்தப் பட்டவர்கள் விதி மீறல் செய்து வெளியில் சுற்றுவதைக் கண்டறியச் செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை நடந்து வருகிறது.  ஆனால் பலரும் இந்த தனிமைப்படுத்துதல் விதிகளை மீறி வெளியே சுற்றி வருகின்றனர்.   இவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தால் அது மற்றவர்களுக்கும் பரவும் வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு விதி மீறல் செய்பவர்களைக் கண்டறிய ஒரு புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  புவி எல்லை அடிப்படையில் செயல்படும் இந்த செயலி மூலம் தனிமைப் படுத்தப்பட்டவரின் மொபைல் அல்லது இ மெயில் மூலம் அவர் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டறிய முடியும்..   ஒருவர் தனிமைப்படுத்தல் பகுதி எல்லையைத் தாண்டினால் அரசுக்கு உடனடியாக தகவல் சென்றடையும்.

இந்த செயலியைக் கேரள அரசு முதன் முதலில் பயன்படுத்தத் தொடங்கி உள்ளது  இந்த செயலி மூலம் மொபைல் எங்குள்ளது, மற்றும் யாருடன் இந்த மொபைல் மூலம் பேசப்பட்டது யாரிடம் இருந்து இ மெயில் வந்தது யாருக்கு அனுப்பப்பட்டது போன்ற அனைத்து விவரங்களையும் அறிய முடியும்.

எனவே இந்த செயலி மூலம் கிடைக்கும் விவரங்கள் தனிமைப் படுத்தப்பட்டவர்கள் எங்குள்ளனர் என்பதற்காகச் சுகாதாரத் துறையினருக்கு மட்டுமே அளிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.  மேலும் இந்த விவரங்கள் அனைத்தும் 4 வாரங்களில் அழிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஏர்டெல்,வோடஃபோன் ஐடியா,  ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களின் விவரங்கள் மட்டுமே தெரிய வரும் எனக் கூறப்படுகிறது.  அரசு நிறுவனங்களான பி எஸ் என் எல் மற்றும் எம் டி என் எல் போன்கள் இடத்தின் அடிப்படையில் ஆன சேவைகளை அளிக்காததால் அந்த வாடிக்கையாளர்களின் விவரங்கள் கிடைக்காது.