அழைப்பு விவரங்களைக் கேட்கும் அரசு : மொபைல் சேவை நிறுவனங்கள் போர்க்கொடி

டில்லி

வாடிக்கையாளர்களின் அழைப்பு விவரங்களை அரசு கேட்பதற்கு மொபைல் சேவை நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மொபைல் அழைப்பு விவரங்களை அரசு கேட்பது என்பது நீண்ட நாட்களாக நடைபெறும் நிகழ்வாகும்.  கடந்த 2013 ஆம் வருடம் அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான அருண் ஜெட்லியின் அழைப்பு விவரங்களை அரசு கேட்டதாக எழுந்த புகாரின் போது இந்த நடவடிக்கைக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

அதையொட்டி சரியான காரணங்கள் இருந்தால் மட்டும் காவல்துறை சூப்பிரண்ட் அதிகாரிக்குச் சமமானோர் குறிப்பிட்டவர் அழைப்பு விவரங்களைக் கேட்கலாம் என விதிமுறைகள் மாற்றப்பட்டன.   அத்துடன் இந்த விவரங்கள் கேட்க மாவட்ட நீதிபதியிடம் விளக்கம் அளித்து அனுமதி பெற வேண்டும் எனவும் அந்த விதியில் கூறப்பட்டது.   அந்த விதிமுறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்தது.

தற்போது தொலை தொடர்பு நிறுவனம் மூலம் மொபைல் சேவை நிறுவனங்களுக்கு டில்லி, ஆந்திரா, அரியானா, இமாச்சலப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், கேரளா, ஒரிசா, மத்தியப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைவருடைய அழைப்பு விவரங்களையும் அளிக்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.  கடந்த சில மாதங்களில் செய்யப்பட்ட மற்றும் பெறப்பட்ட அனைத்து விவரங்களும் கேட்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஒரு மொபைல் சேவை நிறுவன மூத்த அதிகாரி, “கடந்த சில மாதங்களாகவே அரசு இவ்வாறு கேட்பது நடந்து வருகிறது.   ஆனால் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இது மிகவும் அதிகரித்துள்ளது.    இவ்வாறு விவரங்களை அளிப்பதால் எங்களின் சேவையில் இருந்து பலரும் விலக நேரிடலாம்.  குறிப்பாக டில்லி போன்ற மாநிலங்களில் பிரபலங்கள் அதிகம் உள்ளதால் எங்களுக்குப் பாதிப்பு அதிகரிக்கும்.

டில்லி மண்டலத்தில் சுமார் 5.3 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.  அவர்கள் அனைவரது பிப்ரவரி மாதம் 2, 3, மற்றும் 4 ஆம் தேதிக்கான அழைப்பு விவரங்களும்  அளிக்கச் சொல்லி அரசு கேட்டுக் கொண்டுள்ளது   இது டில்லி சட்டப்பேரவை தேர்தல் நடந்த பிப்ரவரி 6ஆம் தேதிக்கு இரு தினங்கள் முந்தைய விவரமாகும்.   அப்போது சிஏஏ அமல் செய்யப்பட்ட நேரம் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

அரசு கேட்டுள்ள இந்த விவரங்கள் எதற்காக என்னும் விளக்கம் அளிக்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது.   மேலும் இதுவரை  அனைத்து அழைப்பு விவரங்களும் கேட்கப்பட்டதில்லை எனவும் கூறப்படுகிறது.   பொதுமக்களின் தனிப்பட்ட உரிமை குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போது இவ்வாறு அரசு கேட்பது விதிமுறைகளுக்கு புறம்பானது என மொபைல் நிறுவனங்கள் தெரிவித்து அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.    இது குறித்து அரசு இதுவரை பதில் அளிக்காமல் உள்ளது.