சென்னை போலீஸ் இன்பார்மர்களாக மாறும் ‘‘நடமாடும் டீ வியாபாரிகள்’’

சென்னை:
சென்னை, பெங்களூரு போன்ற பெரு நகரஙகளில் இரவு நேரங்களிலும் மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். கார்ப்பரேட் நிறுவனங்கள், ஐ.டி.நிறுவனங்கள் உள்பட பல நிறுவனங்கள் தங்களது வசதிக்கு ஏற்பட்ட ஷிப்ட் முறைகளை கொண்டுள்ளன. இதனால் நள்ளிரவு நேரங்களில் பணிக்கு செல்வோரும், திரும்புவோரும் அதிகளவில் இருப்பார்கள்.

அதேபோல் வெளியூர் சென்று திரும்புபவர்களும் நள்ளிரவிலும், அதிகாலையிலும் அதிகளவில் இந்த பெரு நகரங்களில் உண்டு. இதில் குறிப்பாக சென்னை நகர் முழுவதுமே இரவு முதல் விடிய விடிய மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து இருக்கும்.

இவ்வாறு நள்ளிரவு முதல் அதிகாலை வரை நடமாடும் மக்களின் அவசர தேவைகளான டீ, காபி, பால், சுக்கு காப்பி, சிகரெட் போன்றவற்றை விற்பனை செயய நடமாடும் டீ கடைகள் அதிகளவில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஒரு மொபெட்டில் 4 பிளாஸ்க்களில் இந்த சுறுசுறுப்பு பானங்களையும், சிகரெட்களையும் வைத்து நகரின் குறிப்பிட்ட பகுதிகளில் சுற்றி சுற்றி வந்து வியாபாரம் செய்கிறார்கள்.

பகல் நேரங்களில் சென்னையில் ஆயிரகணக்கில் டீ கடைகள் இருந்தாலும், இரவு நேரங்களில் இந்த நடமாடும் டீ வியாபாரிகள் தான் மக்களுக்கு கை கொடுத்து வருகிறார்கள். ஒரு புறம் மக்களுக்கு இந்த வியாபாரிகள் உறுதுணையாக இருந்தாலும், இவர்களை சுற்றி நிற்கும் வாகனங்கள் மற்றும் மக்கள் கூட்டத்தால் இரவு நேர ரோந்து போலீசாருக்கு பெரும் தலைவலியாக தான் இருக்கிறார்கள்.

இந்த கூட்டத்தை கலைப்பதே போலீசாருக்கு வேலையாக இருந்து வந்தது. இதனால் நடமாடும் டீ வியாபாரிகளை விரட்டி அடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தனர். தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சென்னை அடையாறு போலீஸ் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று காலை தனது பேஸ்புக்கில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதில்….

‘‘இந்த வியாபாரிகள் இரவு நேரத்தில் தவிர்க்க முடியாதவர்களாக உள்ளனர். இரவு பணியாளர்களை சுறுசுறுப்புடன் வைத்துக் கொள்வதில் இவர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர். இவர்களை விரட்டி அடிப்பதை தவிர்த்துவிட்டு, இவர்களை ஆக்கப்பூர்வ வழியில் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

பீட் போலீசார் இந்த வியாபாரிகளின் செல்போன் நம்பரை வாங்கிக் கொண்டு, இரவு நேரங்களில் அவர்களோடு தொடர்பில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வியபாரத்தின் போது சந்தேகப்படும் நிகழ்வுகள், நபர்கள் குறித்த தகல்வகளை இந்த வியாபாரிகள் மூலம் பெற அறிவுரை வழங்கப்ப்டடுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,‘‘நேற்று முன் தினம் தான் இந்த யோசனை தோன்றியது. உடனடியாக அம்லபடுத்த வாக்கி டாக்கி மைக் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. டீ வியாபாரிகளுடன் தொடர்பை மேம்படுத்திக் கெள்ளவும், இதன் மூலம் துப்பு துலக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கு பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஒரு டீ வியாபாரி மயிலாப்பூர் பகுதியில் டீ வியாபாரம் செய்தால் குறைந்தபட்சம் 15 முதல் 20 இடங்களில் வாகனத்தை நிறுத்தி வியாபாரம் செய்கிறார். இவர்கள் மூன்று வழிகளில் போலீசாருக்கு உதவ முடியும்’’ என்று அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ‘‘டீ குடிப்பவர்கள் சந்தேகப்படும் படியாக பேசிக்கொண்டால் அது குறித்த தகவலை போலீசாருக்கு அளிக்கலாம். அந்த பகுதிகளில் சந்தேகப்படும் படியான நபர்களின் நடமாட்டத்தை தெரிவிக்கலாம். வங்கி உள்ளிட்ட முக்கியமான இடங்களில் சட்டவிரோத செயல்கள் எதுவும் நடப்பது தெரிந்தால் அது குறித்த தகவலை தெரிவிக்கலாம்.

கிட்டத்தட்ட இரவு நேர பீட் போலீஸை போல் இவர்கள் செயல்பட்டு உதவலாம். இந்த திட்டம் தற்போது பரீட்சாத்திர முறையில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் அறிந்து பின்னர் மேலும் இந்த திட்டத்தை செம்மைபடுத்தப்படும்’’ என பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.