க்னோ

த்திரப்பிரதேச மாநில கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மொபைல் போன் தடை செய்யப்பட்டதாக வந்த செய்திகளைத் தவறானது எனத் துணை முதல்வர் தினேஷ் சர்மா மறுத்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில்  பாஜக ஆட்சி செய்து வருகிறது.  இம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பல அதிரடி அறிவிப்புக்களை வெளியிட்டு வருபவர் ஆவார்.  அவ்வகையில் ஊடகங்களில் யோகி அரசின் உயர்கல்வித் துறை மாநிலத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மொபைல் போன்களை எடுத்து வரத் தடை விதித்துள்ளதாக செய்திகள் வெளி வந்தன.

இது கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே கடும் சர்ச்சையை உண்டாக்கியது.    இது குறித்து அரசு நேரடி உத்தரவு அளிக்கவில்லை எனினும் யோகியின் போக்கை அறிந்த மக்கள் இது உண்மையாக இருக்கும் என நம்பினர்.   இந்நிலையில் இது தவறான தகவல் என அம்மாநில துணை முதல்வர் தினேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

தினேஷ் சர்மா, “கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மொபைல் போன் எடுத்து வரத தடை விதிக்கப்பட்டதாக வந்த செய்திகள் தவறானது.   அரசு தடை விதிக்கவில்லை.   மாணவர்கள் வகுப்பு நேரத்தில் மொபைல்களை சுவிட்ச் ஆஃப் செய்ய வேண்டும் என மட்டுமே கூறப்பட்டுள்ளது.   இந்த உத்தரவு ஏற்கனவே நடைமுறையில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

மொபைல் போன்கள் எடுத்து வரத் தடை இல்லை என்னும் தகவலை உயர்கல்வி இயக்குநர் வந்தனா சர்மா மற்றும் பல்கலைக்கழக பதிவாளர் வினோத்குமார் சிங் ஆகியோரும் உறுதி செய்துள்ளனர்.   வகுப்பறைக்குள் மொபைல் உபயோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது எனவும் அவ்வாறு உபயோகிப்பது தண்டனைக்குரியது எனவும் அவர்கள் கூறி உள்ளனர்.