32 ஆண்டுகளுக்கு முன்பு பலாத்காரம் செய்யப்பட்ட எழுத்தாளர் மனைவி

நியூயார்க்

பிரபல எழுத்தாளரின் முன்னாள் மனைவியும் மாடலுமான பத்மா லட்சுமி 32 ஆண்டுகளுக்கு முன்பு தாம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவை பூர்விகமாக கொண்ட அமெரிக்க மாடல் பத்மா லட்சுமி.   இவர் மாடல், நடிகை, எழுத்தாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர் ஆவார்.   அமெரிக்காவில் 1970 ஆம் ஆண்டு பிறந்த இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை திருமணம் செய்துக் கொண்டார்.   இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.   அதன் பிறகு 2007 ஆம் ஆண்டு அவரிடமிருந்து பத்மா லட்சுமி விவாகரத்து பெற்றார்.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் தற்போது பத்மா லட்சுமி ஒரு கட்டுரை எழுதி உள்ளார்.   அதில் அவர், “அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்ட பிரட் மீது 2 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை வெளிப்படையாக கூறி உள்ளனர்.    எனக்கு 32 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு கொடுமையான சம்பவம் தற்போது நினைவுக்கு வருகிறது.

எனது 16 வயதில் நான் பாலியல் பலாத்காரம் செய்யபட்டுள்ளேன்.   அந்த சமயத்தில் 23 வயதான கல்லூரி மாணவர் ஒருவர் எனக்கு ஆண் நண்பராக இருந்தார்.   அப்போது ஒரு புத்தாண்டு தினக் கொண்டாட்டத்தின் போது அந்த இளைஞர் என்னை பாலியல்  பலாத்காரம் செய்தார்.    அதிர்ச்சி அடைந்த நான் எனது பெற்றோரிடம் கூறி அழுதேன்.

அவர்கள் உடனடியாக என்னை இந்தியாவில் உள்ள எனது தாத்தா, பாட்டி வீட்டுக்கு ஓராண்டு இருக்குமாறு அனுப்பி வைத்தனர்.    எனக்கு இதன் மூலம் ஒரு பாடம் கிடைத்தது.  அதாவது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது பற்றி தெரிவித்தால் நீங்கள் வெளியேற்றப்படுவீர்கள் என்பதே அந்த பாடமாகும்.   எனது அப்போதைய அனுபவங்களால் நான் பெரிதும் பாதிக்கப்பட்டேன்” என தெரிவித்துள்ளார்.