சென்னை: தமிழக தலைநகரில் கிட்டத்தட்ட 5 மாத இடைவெளிக்குப் பிறகு, டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், மிதமான மக்கள் கூட்டம் இருந்ததாகவும், அதேசமயம் சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னையின் பழைய வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை பகுதிகளில் திறக்கப்பட்ட கடைகளில் பிற்பகல் 1 மணிவரை கூட்டம் இருந்ததாகவும், அதேசமயம், தென்சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் திறக்கப்பட்ட கடைகளில் காலை 10 மணிவரையே கூட்டம் இருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அமைக்கப்பட்ட தடுப்புகளுக்குள் மக்கள் வரிசையாக நின்றனர் என்றும், சில இடங்களில் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர் என்றும் கூறப்படுகிறது.

பல இடங்களில், டாஸ்மாக் ஊழியர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, பிற்பகல் 1 மணிவரை, மொத்தமாக 100 முதல் 150 டோக்கன்கள் வரையே விற்பனையாகின என்ற விபரங்கள் வெளிவந்தன.

அதேசமயம், டாஸ்மாக் திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அண்ணாநகர் மற்றும் ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் ‍பெண்களின் போராட்டமும் நடைபெற்றது.