சென்னை:
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.

தமிழகத்தின் உள்பகுதிகள், தென் தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை, காரைக்காலில் ஒரு சில இடங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்குள்  மழையோ அல்லது இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும்,  தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் மற்றும இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஒகேனக்கல்லில் 7 சென்டி மீட்டர் மழையும், ஊத்துக்குளியில் 6 சென்டி மீட்டர் மழையும், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் திருத்துறைப்பூண்டியில் தலா 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும்.
மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.