சென்னை:
சிறுசேரி சிப்காட் தொழில்நுட்ப பூங்காவில் ரூ.500 கோடி செலவில் நவீன தரவு மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  இன்று காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்காவில், நேஷனல் பேமண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தின் மூலம் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள நவீன தரவு மையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  நேஷனல் பேமண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம், மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி இந்த தரவு மையம் அமைக்கப்பட உள்ளது.
இந்நிறுவனம் சில்லரைப் பரிவர்த்தனைகள் முதல் வங்கிகளுக்கு இடையேயான பணத் தீர்வுகள் வரை அனைத்து பணப் பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ளும். இந்நிறுவனம் ஒவ்வொரு மாதமும் சுமார் நானூறு கோடி பரிவர்த்தனைகளைக் கையாளுகிறது. இவற்றின் பொருளாதார மதிப்பு மாதத்திற்கு சுமார் பதினைந்து லட்சம் கோடி ரூபாய் ஆகும். இந்நிறுவனம், சர்வதேச அளவில் மிகப்பெரிய பரிவர்த்தனை அமைப்புகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
இந்நிறுவனத்தின் மூலம், சர்வதேச தரத்தில் எட்டு அடுக்கு பாதுகாப்பு உட்கட்டமைப்பு வசதி களுடன் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன தரவு மையம் அமைக்கப்படவுள்ளது. இந்நவீன தரவு மையம் வேகமாக வளர்ந்துவரும் தகவல் தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்வதற்கு துணைபுரியும். சென்னை மாநகரத்தில் நான்கு அடுக்கு தரத்துடன், முதல் தரவு மையமாக இது அமைக்கப்படவுள்ளது. டிஜிட்டல் இந்தியா என்ற நோக்கத்தினை செயல்படுத்துகின்ற அனைத்துவிதமான டிஜிட்டல் முயற்சிகளுக்கும் இந்த தரவு மையம் உதவிபுரியும்.
சுற்றுப்புறத் தூய்மையை பாதிக்காத வண்ணம் பசுமைக் கட்டட வரைமுறைகளின்படி இம்மையம் அமைக்கப்படவுள்ளது. பொருட்களின் இணையம் எனும் நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையிலும், தங்குதடையற்ற தொடர்ச்சியான மின்சார இணைப்பு வசதிகளைக் கொண்டதாகவும், புயல், நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் சவால்களை சமாளிக்கும் வகையிலும் இத்தரவு மையம் அமைக்கப்படவுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் க. சண்முகம், தகவல் தொழில்நுட்பவியல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) ஹன்ஸ் ராஜ் வர்மா, நேஷனல் பேமண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தின் முதன்மை தொழில்நுட்ப அலுவலர் டாக்டர் என். ராஜேந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.