மாசெசூசெட்ஸ், அமெரிக்கா

மெரிக்காவின் மாடர்னா நிறுவன கொரோனா தடுப்பூசி 94.5% திறன் உள்ளது எனவும் அது ஒப்புதலுக்கு தயாராக உள்ளதாகவும் அந்நிறுவன ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

கொரோனா தடுப்பூசி சோதனைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகின்றன.   உலகின் பல நாடுகளும் இந்த தடுப்பூசி கண்டறிவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.   சென்ற வாரம் பிஃபிசர் மற்றும் பயோண்டெக் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பான தடுப்பூசி சோதனைகளில் முதலில் வெற்றி கண்டு 90% திறன் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.  இந்த தடுப்பூசி தற்போது ஒப்புதலுக்காகக் காத்து உள்ளது.

இதைப்போல் மற்றொரு நிறுவனமான மாடர்னா நிறுவனம் நேற்று மதியம் வெளியிட்ட அறிவிப்பில் இந்நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த நிறுவன தடுப்பூசி முதலில் 15000 பேருக்கு அளிக்கப்பட்டது.  பல மாதங்களுக்குப் பிறகு அதில் 90 பேருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் 11 பேரைத் தவிர மற்றவர்களுக்கு லேசான பாதிப்பு ஏற்பட்டது.

அதன் பிறகு நடந்த சோதனையில் 15000 பேருக்கு அளிக்கப்பட்டு அதில் 5 பேருக்கு மட்டும் லேசான கொரொனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.   இதில் யாருக்கும் கடினமான பாதிப்பு ஏற்படவில்லை.   மேலும் இந்த நிறுவனம் தங்களது தடுப்பூசி செலுத்தப்பட்டோருக்கு எவ்வித பக்கவிளைவும் ஏற்படவில்லை என உறுதி அளித்துள்ளது.   மிகச் சிலருக்கு மட்டும் தலைவலி மற்றும் உடல் வலி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிறுவனத்தின் சோதனை அறிக்கைகள் மேலும் வந்த வண்ணம் உள்ளதால் அது முழுவதும் வந்த பிறகு அமெரிக்க உணவு மற்றும் மருத்துவ நிர்வாகத்துக்கு ஒப்புதல் கோரி விண்ணப்பிக்க உள்ளது.    அடுத்த அதாவது டிசம்பர் மாதம் முடிவதற்குள் ஒப்புதல் பெறப்பட்டு உற்பத்தி தொடங்கப்படலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆரம்பக் கால கட்டத்தில் அனைவருக்கும் போதுமான தடுப்பு மருந்து உற்பத்தி செய்ய முடியாது என்பதால் முதலில் சுகாதார ஊழியர்கள், முதியோர், மற்றும் மருத்துவ ரீதியாக கொரோனா பாதிக்க அதிக வாய்ப்புடையோருக்கு இந்த மருந்து அளிக்க[அட உள்ளது.  வரும் ஏப்ரல் இறுதிக்குள் தேவையான மருந்து கிடைக்கும் எனவும் அது மே, ஜூன், ஜூலை மாதங்களுக்குள் அனைவருக்கும் அளிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

இந்த தடுப்பூசியும் பிஃபிசர் நிறுவன தடுப்பூசியின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.  ஆனால் பிஃபிசர் நிறுவன தடுப்பூசியை மைனஸ் 75 டிகிரி வெப்பத்தில் சேமிக்க வேண்டி உள்ளது.  எனவே சாதாரண மருந்தகம் மற்றும் மருத்துவமனைகளில் இதைச் சேமித்து வைக்க முடியாது.  ஆனால் மாடர்னா தடுப்பூசியை மைனஸ் 20 டிகிரியில் சேமித்து வைக்கலாம்.   ஏற்கனவே அம்மை தடுப்பூசி இந்த வெப்பத்தில் சேமித்து வைக்கப்படுகிறது.

எனவே இந்த தடுப்பூசியை மருந்தகம் மற்றும் மருத்துவமனைகளில் உள்ள குளிர்பதன பெட்டியில் வைத்தால் போதுமானது.  இந்த தடுப்பூசி மருந்தைக் குளிர்பதனப் பெட்டியில் 30 நாட்கள் வரை வைத்திருக்க முடியும்.  ஆனால் பிஃபிசர் நிறுவன தடுப்பூசியை 5 நாட்கள் மட்டுமே வைத்திருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.