நியூயார்க்: கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கும்பணியில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா நிறுவனம் கொரோனா தடுப்பூசியின் விலையை அறிவித்து உள்ளது. அதன்படி, இந்திய மதிப்பில்,  குறைந்தபட்ச விலை ரூ.1855 முதல் அதிகபட்சமாக ரூ.2750 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது.

உலக மக்களை சொல்லொனா துயரத்துக்கு ஆளாக்கி வரும் கொரோனாவை தடுக்க, உலகம் முழுவதும் 600க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்  தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. பல நிறுவனங்களின் தடுப்பூசிகள், இறுதிக்கட்ட சோதனைகளை எட்டியுள்ளன. இதையடுத்து, இந்த ஆண்டு டிசம்பரில் தடுப்பூசி பயன்பாட்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் உலக சுகாதார அமைப்பால் தற்போது வரை எந்த தடுப்பு மருந்துக்கும் அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை.

இந்தநிலையில் அமெரிக்க நிறுவனம் மாடர்னா தயாரிக்கும் தடுப்பு மருந்து 95% வெற்றி பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விரைவில் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசி  பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரலாம் என்று நம்பப்பட்டு வருகிறது.

இதையடுத்து இந்த தடுப்பு மருந்தின் விலை ஒரு டோஸ் ரூ.1855 முதல் ரூ.2750 வரை விற்கப்பட உள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாடர்னாவின் தலைமை நிர்வாகி ஸ்டீபன் பான்செல் செய்தியாளர்களை சந்தித்தது,  தனது நிறுவனம் தனது கோவிட் -19 தடுப்பூசி வேட்பாளரின் ஒரு டோஸுக்கு ரூ. 1855 (அமெரிக்க டாலர் 25) முதல் ரூ .2755 (அமெரிக்க டாலர் 37) வரை அரசு வசூலிக்கும் என்று  தெரிவித்து உள்ளார்.

இதையடுத்து பல்வேறு நாடுகளும் இந்த தடுப்பு மருந்து வாங்க தீவிரம் காட்டி வருகின்றன.