தீவிரமாக பரவி வரும் கொரோனாவிற்கு எதிரான சிகிச்சை முறை மற்றும் தடுப்பு மருந்துக்கு உலகமே எதிர்பார்த்து காத்திருக்க, மாடர்னா, மருந்து தயாரிப்பு நிறுவனம், திங்கள் அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, 8 ஆரோக்கியமான தன்னார்வலர்களில் நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட சோதனையில், இவர்களின் தடுப்பு மருந்து நேர்மறை முடிவுகளைக் காட்டியுள்ளது. இந்த மருந்து கொடுக்கப்பட்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்பட்டு, வைரசுக்கு எதிரான செயல்பாட்டைக் காட்டியுள்ளது. ஒரு நாளைக்கு இரண்டு டோஸ் வீதம் மருந்தளிக்கப்பட்டு, மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை அடுத்ததாக நூறு, பின்னர் ஆயிரம் என தன்னார்வலர் நோயாளிகளிடம் சில கட்டங்களாக மீண்டும் பரிசோதிக்கப்படவுள்ளது. முதல்கட்ட சோதனைக்குப்பின், இவர்களின் தடுப்பு மருந்து  பெரிய அளவிலான மனித சோதனைக்கு தயாராகியுள்ளதாக இந்த நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் தடுப்பு மருந்தானது, ஒப்பீட்டளவில், யாரும் அவ்வளவாக பயன்படுத்தாத வைரஸின் mRNA – வை தடுப்பு மருந்தாகக் கொண்டிருக்கும் வழிமுறையை இந்த நிறுவனம் கடைப்பிடித்துள்ளது.
முதற்கட்ட சோதனையில் சரியான முடிவுகள் வந்ததாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, கடந்த திங்கள்கிழமை பிற்பகலில் மாடர்னாவின் பங்குகள் 25%-க்கும் மேலாக, கடந்த ஆறு வாரங்களில் இல்லாத அளவில் உயர்ந்துள்ளது. மேலும், மத்திய வங்கி பொருளாதாரம் மற்றும் சந்தைகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்ற பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் எச். பவலின் அறிக்கையும் பங்கு வர்த்தகத்தில் உயர்வைக் கூட்டியது. எஸ் அண்ட் பி 500 3%, ஐரோப்பாவில் பங்கு வர்த்தகம் 4% – 6% வரை, எண்ணெய் விலை, யுனைடெட் ஏர்லைன்ஸ், எக்ஸ்பீடியா குரூப் மற்றும் மேரியட் இன்டர்நேஷனல் போன்ற பயண தொடர்பான நிறுவனங்களும் ஏற்றத்தைக் கண்டன.

உலகெங்கிலும் கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் மக்களை நோய்வாய்ப்படுத்தி, சுமார் 315,000 பேரைக் கொன்றுள்ள கொரோனாவிற்கு எதிரான, நம்பிக்கைக்கு உரிய சில  தடுப்பு மருந்துகள் சோதனையில் உள்ளன. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள், நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் இதற்கான ஆய்வுகளில் ஈடுப்பட்டிருந்தாலும், சில நிறுவனங்களின் தடுப்பு மருந்துகள் நம்பிக்கையளிப்பதாக உள்ளன. ஃபைசர் மற்றும் அதன் ஜெர்மன் கூட்டாளர் பயோஎன்டெக், சீன நிறுவனமான கன்சினோ மற்றும் அஸ்ட்ராஜெனிகாவுடன் இணைந்து செயல்படும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பலரும் முதல்கட்ட மனித சோதனைகளை துவங்கியுள்ளனர். ஒரே ஒன்று என்றில்லாமல், பல தடுப்பு மருந்துகள் இருப்பது அவசியம் என்று வல்லுநர்கள் ஒப்புக்கொள்கிறார்கள், ஏனென்றால் பில்லியன் கணக்கான மக்களுக்கு தேவை என்ற நிலை இருக்கு இந்நேரத்தில், உலகளாவிய தேவை எந்தவொரு தனி உற்பத்தியாளரின் உற்பத்தி திறனையும் விட அதிகமாக இருக்கும். அதேசமயம், விஞ்ஞானிகள் மத்தியில் ஒரு பரவலான கவலை உள்ளது. மருந்து கண்டறியும் அவசியத்திற்கிடையில், அதற்கான கட்டுபாடுகள், பாதுகாப்பு அம்சங்களில் எவ்வித சமரசமும் இருக்கக்கூடாது என்பதே அது. ஏனெனில், அவசர தயாரிப்பு பணிகள் மருந்தின் தரத்தை பாதிக்கலாம். எனவே மருந்து செயல்படாமல் போவதற்கும், நோயாளிகளுக்கு எதிர்மறை விளைவுகளை உருவாக்கி தீங்கு விளைவிக்கவும் செய்யலாம். ஆனால், மாடர்னாவின் mRNA அணுகுமுறையின் சாத்தியமான வலிமை என்னவென்றால், இது ஒவ்வொரு புதிய வைரஸ் அச்சுறுத்தலுக்கும் விரைவாக மாற்றியமைக்கக்கூடிய ஒரு மரபணு கட்டமைப்பைப் பயன்படுத்துகிறது. 600 பேர் பங்கேற்கும் இரண்டாம் கட்ட சோதனைகள் விரைவில் தொடங்கப்படுவதாகவும், மூன்றாம் கட்டம் ஜூலை மாதத்தில் ஆயிரக்கணக்கான ஆரோக்கியமான மக்களைக் கொண்டு தொடங்க உள்ளதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.
அந்த சோதனைகள் சரியாக நடந்தால், இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த தடுப்பு மருந்து பரவலான பயன்பாட்டிற்கு கிடைக்கக்கூடும் என்று மாடர்னாவின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் டால் ஜாக்ஸ் ஒரு பேட்டியில் கூறினார். மேலும் “முடிந்தவரை பல மில்லியன்களை சம்பாதிக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்.” என்றார். இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி கிடைக்கும் என்று அதிபர் டிரம்ப் சமீபத்தில் கூறினார். தடுப்பு மருந்துகளின் ஆய்வுகளின் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கான நிர்வாகத்தின் முயற்சியாக,  “ஆப்பரேஷன் வார்ப் ஸ்பீட்டின்” புதிதாக நியமிக்கப்பட்ட தலைவரான மொன்செஃப் ஸ்லாவி அவரது கணிப்பை ஆதரித்தார். தனது புதிய அரசு பதவிக் காரணமாக,  மாடர்னாவின் இயக்குநர்கள் குழுவின் முன்னாள் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த திரு. ஸ்லாவி, ஒரு மாநாட்டில் பேசும்போது, மாடர்னே நிறுவனத்தின் தடுப்பு மருந்தின் ஆரம்பக்கட்ட ஆராய்ச்சி முடிவுகளை பார்த்ததாகவும், விரைவில் ஒரு தடுப்பு மருந்தை உருவாக்க முடியும் என்று நம்புவதாகவும் கூறினார். மேலும், கடந்த திங்களன்று, சுகாதார மற்றும் மனித சேவைகள் துறையின் செய்தித் தொடர்பாளர் கெய்ட்லின் ஓக்லி, திரு. ஸ்லாவி செவ்வாய்க்கிழமை காலை சுமார் 10 மில்லியன் டாலர் மதிப்புள்ள தனது மாடர்னா பங்குகளின் உரிமையில் இருந்து விலகுவார் என்றும், கடந்த வியாழக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை விற்பனை வரையிலான வர்த்தகத்தில் அவரது பங்குக்கான தொகையை புற்றுநோய் ஆராய்ச்சிக்கு திரு. ஸ்லாவி நன்கொடை அளிப்பார் என்றும் கூறினார். இந்த பங்கின் விலை திங்களன்று 80 டாலராக முடிவடைந்தது. இது கடந்த வியாழக்கிழமை 64.56 டாலராக இருந்தது. இதன் மூலம் அவரது பங்கு சுமார் 2.4 மில்லியன் டாலர்களாக உயர்ந்தது. திங்களன்று வெள்ளை மாளிகையில் உணவக நிர்வாகிகளுடன் ஒரு சுற்று மேஜையில் உரையாடிய திரு. டிரம்ப், “குணப்படுத்துதல் என்ற அடிப்படையிலும், தடுப்பு மருந்து தயாராகிவருவதன் அடிப்படையிலும், இன்று ஒரு முக்கியமான நாள்” என்று வர்ணித்தார். மேலும், இந்த தகவலே, வர்த்தத்தில் மாடர்னே நிறுவனத்தின் பங்குகள் விலை உயர்ந்தன என்பதையும் குறிப்பிட்டார்.

மாடர்னே நிறுவனம், தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான நிறுவனத்துடன் இணைந்து இந்த தடுப்பு மருந்தை தயாரிக்கிறது. இந்த நிறுவனம் டாக்டர். அந்தோனி ஃபாசி தலைமையில் செயல்படுகிறது என்பதுவும், இவரே இந்த மருந்தின் மனித பரிசோதனைகளுக்கு பொறுப்பாளி என்பதுவும் குறிப்பிடத்தக்கது.  தேசிய சுகாதார நிறுவனங்களின் ஒரு பகுதியாக, இந்த நிறுவனம் மற்ற நிறுவனங்களுடன் இணைந்து கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ளது. ஆய்வுகளை விரைவுப்படுத்தும் நோக்குடன், மாடர்னே மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஒவ்வொன்றும் சுமார் அரை பில்லியன் டாலர்களை யு.எஸ். அரசாங்கத்திடமிருந்து பெற்றுள்ளனர். திங்களன்று விவரிக்கப்பட்ட மாடர்னாவின் முதலாம் கட்ட ஆய்வில் பங்கேற்றவர்கள் 18 முதல் 55 வயதுடைய ஆரோக்கியமான தன்னார்வலர்கள் ஆவர். தடுப்பு மருந்து அளிக்கப்பட பின்னர் அவர்களின் நோயெதிர்ப்பு மண்டலம், Antibody – ஆன்டிபாடி எனப்படும் கிருமி எதிர்ப்பு (இங்கே கொரோனா வைரஸுக்கு எதிராக) புரதங்களை உருவாக்கியது. இந்த ஆன்டிபாடிகளை வைத்து, ஆய்வகத்தில் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களின் செல்களை வைத்து சோதித்ததில் வைரஸ் வளர்ச்சி தடுக்கப்பட்டது. – ஒரு சிறந்த தடுப்பு மருந்தாக நமக்கும் அதுவே தேவை. இந்த தன்னார்வலர்களுக்கு உருவான ஆன்டிபாடியின் அளவு, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் இரத்தத்தில் இருந்த அதே அளவு, இன்னும் அதிக அளவுக்கே இருந்தது.
டாக்டர் மார்க் ஜே. முல்லிகன், N.Y.U, லங்கன் தடுப்பு மருந்துகள் மையத்தின் இயக்குனர், கூறுகையில் “மாடர்னேவின் கண்டுபிடிப்புகள் மிகவும் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது” என்றார். அவர் மேலும் கூறுகையில், “முதல்கட்ட சோதனைகள் ஒரு சிறிய எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்கள் கொண்டது என்றாலும்,  இது ஒரு நல்ல தொடக்கமாகத் தோன்றுகிறது.” என்றார். டாக்டர் முல்லிகன் முதற்கட்ட சோதனையில் ஈடுபடவில்லை. அனால், அடுத்தடுத்த கட்ட சோதனையில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மாடர்னேவின் முதற்கட்ட சோதனைகள் இன்னும் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் இன்னும் இரண்டு வேறு வகையான வயது வரம்புக் கொண்ட குழுக்கள் – 55 முதல் 70 மற்றும் 71 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் – இந்த தடுப்பு மருந்தை சோதிக்க இப்போது பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிறுவனம் இதுவரை, தனது திட்டத்தில் குழந்தைகளை சேர்ப்பது குறித்து எதுவும் கூறப்படவில்லை. இளம் வயதினருக்கு இந்த தடுப்பு மருந்து அபாயமில்லை என தெரியப்படுத்தும்வரை, தடுப்பு மருந்தின் சோதனைகள் தாமதமாகலாம். மேலும் முதற்கட்ட சோதனையின் முடிவு வெளியிடப்படவில்லை. ஆனால், உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மாடர்னே, அடுத்தக் கட்ட சோதனைகள் குறித்து எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால், வரும் கோடையில் சமர்ப்பிக்கப்பட்ட முடிவுகளை அனைவரும் காணும் வகையில் பொதுவில் வெளிடுவார்கள் என்று நம்புவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் டாக்டர் ஜாக்ஸ் கூறும்போது, ஒவ்வொரு நோயாளிக்கும், நான்கு நாட்கள் இடைவெளியில் இரண்டு டோஸ்கள் தேவைப்படலாம். எனவே, எத்தனை டோஸ்கள் தயாரிக்கப்பட்டுள்ளதோ, அதில் பாதி அளவு பேருக்கு மட்டுமே தற்போது தடுப்பு மருந்து அளிக்க முடியும். இதைப்பற்றி கருத்து கூறியுள்ள மாடர்னே நிறுவனம், இந்த தடுப்பு மருந்தை எலிகளுக்கு அளித்து சோதனை செய்தபோது, நுரையீரலில் வைரஸ்களின் வளர்ச்சி தடுக்கப்பட்டதாக கூறியுள்ளனர். இங்கு உருவான ஆன்டிபாடிகளின் அளவு முழுமையாக குணமடைந்தவர்களுக்கு காணப்பட்ட அளவை ஒத்திருந்தது என்றும் கூறினார். மேலும், இந்த தடுப்பு மருந்துகளில், குறைந்த, நடுத்தர மற்றும் அதிக டோஸ்கள் கொடுத்து சோதித்தபோது குறைந்த அளவு டோஸ் கொண்டவர்கள் குணமடைந்ததையும் அதிக அளவு மருந்து கொடுத்தவர்களுக்கு சிவத்தல், கையில் புண்கள் ஏற்பட்டதையும், தலைவலி போன்ற சிறிய அளவிலான பக்க விளைவுகள் இருந்ததையும் கண்டதாக கூறினார். ஆனால், ஓரிரு நாளில் இந்த விளைவுகள் குணமடைந்து விட்டதாகவும் தெரிவித்தார். இருந்தாலும், குறைந்த அளவு தடுப்பு மருந்தே போதுமானது என்றும் கருத்து தெரிவித்தனர்.
“குறைந்த அளவு தடுப்பு மருந்தே போதும் என்பதால், நம்மால் அதிக எண்ணிக்கையிலான தடுப்பு மருந்து டோஸ்கள் உற்பத்தி செய்ய முடியும்” என்று டாக்டர் ஜாக்ஸ் கூறினார். அவர் மேலும் கூறுகையில், “தற்போது நமது தேவை, விநியோகத்தை விட அதிகமாக உள்ளது, எனவே நம்மால் முடிந்த அளவு, குறைந்த டோஸ் மருந்தை உபயோகித்தல் நமது கடமை ஆகும். இதன் மூலம் முடிந்த அளவு மருந்தை நாம் சேமிக்கலாம்” என்றார். கேம்பிரிட்ஜ், மாஸ்., ஐ இருப்பிடமாகம் கொண்ட இந்த நிறுவனம், நோர்வூட்டில் அருகிலேயே ஒரு தடுப்பு மருந்து உற்பத்தி மையத்தினைக் கொண்டுள்ளது. மேலும், சோதனை முடிவுகள் வெற்றியை உறுதி செய்யுமானால், சுவிஸ் நாட்டின் நிறுவனமான, லோன்சாவுடன், உலக அளவிலான விநியோகத்திற்காக, ஆண்டுக்கு ஒரு பில்லியன் டோஸ்கள் தயாரிக்க, அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. மேலும், டாக்டர் ஜாக்ஸ், மாடர்னா அமெரிக்காவில் உள்ள பிற தடுப்பு மருந்து தயாரிப்பாளர்களுடன் இணைந்து உற்பத்தி செய்ய பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளோம் என்றார்.
மாடர்னா கொரோனா தடுப்பு மருந்தாக, வைரஸின் மரபணு பொருள் – mRNA – வை பயன்படுத்துகிறது, மேலும் 9 விதமான வேறு தடுப்பு மருந்துகளும் ஆய்வில் உள்ளன. இதில் சில சுவாசக் குறைபாட்டு நோய்களை உருவாக்கவல்ல வைரஸ்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன என்றாலும், mRNA – வை எந்த நிறுவனமும் பயன்படுத்தியது இல்லை. தற்போது சந்தையிலும் இல்லை. சீன விஞ்ஞானிகள் கொரோனா வைரஸின் மரபணு வரிசையை இணையத்தில் வெளியிட்டவுடன், புதிய கொரோனா வைரஸின் தடுப்பு மருந்து தயாரிக்கும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. மாடர்னாவின் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனம், மனித நோயெதிர்ப்பு செல்களுடன் வைரஸ் ஒட்டிக் கொள்ள உதவும், வைரஸின் மேற்பரப்பில் ஒரு பூங்கொத்து வடிவிலான ஒரு புரத நீட்சியைக் கண்டனர். இது ஸ்பைக் புரோட்டீன் என்று அழைக்கப்படுகிறது.  அந்த புரதத்தின் குறிப்பிட்ட அமினோமில வரிசை குறிவைத்து அளிக்கும் வகையில் இந்த தடுப்பு மருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பு மருந்து எவ்வாறு செயல்படும் எனில், தடுப்பு மருந்தை ஒருவர் ஊசி மூலம் எடுத்துக் கொள்ளும்போது, மனித உடலுக்குள், நோய் எதிர்ப்பு செல்களுக்குள் உள்நுழையும். இதனால், நமது நோய் எதிர்ப்பு மண்டலம், வைரஸ் தாக்குதல் நடந்துள்ளதாகக் கருதி, வைரஸின் மேற்பரப்பில் உள்ள ஸ்பைக் புரோட்டீனுக்கு எதிராக ஆன்டிபாடி எனப்படும் எதிர்ப்பு புரதங்களை உருவாக்கும். தற்போது நிஜ வைரஸ் தாக்குதல் நடந்தால், இந்த ஆன்டிபாடிகள் ஸ்பைக் புரோட்டீன்களை தாக்கி, வைரஸ் நமது செல்களில் ஒட்டிக்கொள்வதை தடுத்து அழித்து விடும். இவ்வாறு நோய் தொற்று தடுக்கப்படுகிறது. “மரபணு நோய்த்தடுப்புக்கான புதிய தொழில்நுட்பங்கள் விரைவானவை மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாடுகளை உருவாக்குவதில் அதிக சக்தி வாய்ந்தவை” என்று டாக்டர் முல்லிகன் கூறினார். இறுதியாக”இன்றைய ஆர்.என்.ஏ ஆய்வு முடிவுகள் பெரும் சாத்தியம் இருப்பதை உறுதிப்படுத்துகின்றன.” என்று கூறி முடித்தார்.
English: Denise Grady
தமிழில்: லயா