மோடிஅரசின் நிர்வாக சீரழிவு: வாகன விற்பனை சரிவால் வேலையிழக்கும் தொழிலாளர்கள், முடங்கிய மாநிலஅரசின் வருவாய்

டில்லி:

மோடிஅரசின் நிர்வாக சீரழிவு காரணமாக ஆட்டோபைல் துறை கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைகளை இழந்து வரும் நிலையில், மற்றொரு புறம் மாநில அரசுகளும் கடுமையான வருமான இழப்பை சந்தித்து வருகின்றன.

த்தியஅரசு வாகனங்களுக்கு விதித்துள்ள பல்வேறு வகையான வரிகள் மற்றும், விரைவில் மின்சார வாகனம் போன்ற அறிவிப்பு காரணமாக வாகன விற்பனை கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. பிரபல வாகன தயாரிப்பு  நிறுவனங்கள், உற்பத்தியை நிறுத்தி உள்ளன. இதன் காரண மாக பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழந்து வரும் சூழலில், வாகனப்பதிவால் மாநில அரசுகளுக்கு கிடைந்து வந்த வருமானமும் முடங்கி உள்ளது.

இது இந்திய பொருளாதாரத்தை மட்டுமின்றி மாநில அரசுகளின் நிதிச்சுமையையும் கூட்டி உள்ளதாக அதிகாரிகள் புலம்பி வருகின்றனர்.

மத்தியநிதி அமைச்சர் நடப்பு ஆண்டில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையைத் தொடர்ந்து நமது நாட்டின் வாகனத்தொழில் கடும் ஆட்டத்தைக் கண்டுள்ளது. லைப் போக்குவரத்து  அமைச்சகம் வாகனப் பதிவுக் கட்டணத்தை ரூ.600லிருந்து ரூ. 5000 ஆக உயர்த்தியது. அத்துடன் கடந்த ஏப்ரல் 1 முதல் பிஎஸ் 4 எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி மட்டுமின்றி, இன்சூரன்ஸ் தொகை பல மடங்கு அதிகரிப்பு போன்ற காரணங்களால் வாகன விற்பனை 50 சதவிகிதம் அளவுக்கு குறைந்துள்ளது

கடந்த 2017ம்  ஆண்டு ஜூலை 1-ம் தேதி, நாட்டின் வரி சீர்திருத்தமாக கொண்டு வரப்பட்ட  ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வந்தபிறகு உணவுப் பொருட்கள் உள்பட ஒருசில பொருட்களைத்  தவிர மற்ற அனைத்து வகையான பொருட்களும் கடுமையான வகையில் விலைகள் உயர்ந்து உள்ளன.

ஆனால், மத்தியஅரசோ மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டு ஒரே வரி என்ற அடிப்படையில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு உள்ளதாக கூறி வருகிறது. இந்த வரி விதிப்பு காரணமாக தொடக்கத்தில் சிறுதொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பெரும் தொழில்களும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. குறிப்பாக வாகன உற்பத்தித் துறை கடுமையான சரிவை சந்தித்து வருகின்றன.

இதைத்தொடர்ந்து பிரபல கார் நிறுவனங்கள், தாங்கள் ஏற்கனவே தயாரித்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கார்களை விற்க முடியாமல் முடங்கிப்போய் உள்ளன. பல நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி உள்ள நிலையில், தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றன.

வாகன விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து பல  முகவர்கள் தங்கள் விற் பனை நிலையங்களை மூடியதால் உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலைக்கு வாகன உற்பத்தி நிறுவனங்கள் தள்ளப்பட்டன. இதனால் ஏராளமானோர் பணி  இழந்துள்ளனர்.

சமீபத்தில் பிரபல கார் நிறுவனமான மாருதி சுசூகி நிறுவனம் 3000 தொழிலாளர்களை பணியில் இருந்து நீக்குவதாக அறிவித்து உள்ளது. மேலும், அந்த நிறுவனத்துக்கு உதிரிப்பாகங்கள் தயாரித்து வழங்கிய ஏராளமான சிறுதொழில் நிறுவனங்களிடமும் தயாரிப்புகளை நிறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக  இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப் பில், நாட்டின் பொருளாதார தேக்கம் காரணமாக, இந்தியாவில்  வாகனங்கள் விற்பனை கடந்த 9 மாதங்களாக தொடர்ந்து வீழ்ச்சியுற்று வருவதாக தெரிவித்து உள்ளது.   மிக அதிக அளவுக்கு விற்பனை குறைந்திருப்பது பொதுமக்கள் பயன்படுத்தும் பயணிகள் வாகனங் களில் தான் எனவும் அவற்றின் விற்பனை 31 சதவீதம் வரை குறைந்துள்ளது எனவும் கூறியிருக்கிறது. 

கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவில் வாகனங்கள் விற்பனை 18.7 சதவீதம் குறைந்து விட்டது எனவும் தெரிவித்திருக்கிறது. 

வாகன உற்பத்தி மற்றும் உதிரிபாக உற்பத்தி தொழிலதிபர்கள் அரசுக்கு வாகனங்களுக்கு விதிக்கப்படும் ஜி எஸ் டி வரி விகிதத்தைக் குறைக்குமாறு  வேண்டுகோள் விடுத்தனர். 

இதனிடையே, புதிய மாசுக்கட்டுப்பாட்டு விதிகளின்படி, பி.எஸ்.4 (BS4) ரக வாகனங்கள் விரைவில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட உள்ளதால், இயற்கை எரிவாயுவில் இயங்கும் வாகனங்களில் கவனம் செலுத்த ஆட்டோபைல் நிறுவனங்கள் உத்தேசித்து வருகிறது. 

புதிய வாகனங்களின் விற்பனை  பாதிக்கப்பட்டு உள்ளதால், மாநிலங்களில் உள்ள போக்குவரத்து அலுவலகங்களில் வாகனப்பதிவும் சுமார்  50 சதவீதம் குறைந்து இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக மாநில போக்குவரத்துக்கு துறைக்கு வரும் வருவாய் 50 சதவிகிதம் குறைந்துள்ளதாக அதிகாரிகள் புலம்பி வருகின்றனர்.

அரசுக்கு வருமானம் ஈட்டித்தரும் துறைகளில் முக்கியமானது ஆர்டிஓ எனப்படும் வாகனப்பதிவுத் துறை. இதன் மூலமே வாகன ஓட்டிகளுக்கான லைசென்சு முதல் வாகனப்பதிவு என அனைத்து பதிவுகளும் நடைபெற்று வருகின்றன. இதில் ஒருபுறம் லஞ்ச லாவண்யம்  இருந்தாலும், அரசுக்கு வரவேண்டிய வருமானமும் வந்துகொண்டிருந்தது.

ஆனால், கடந்த சில மாதங்களாக வாகனப்பதிவு இல்லாததால், கடுமையான வருமான இழப்பை சந்தித்து வருகிறது.  தமிழகத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்டிஓ) வாகனங்கள் பதிவு இந்த மாதம் 50 சதவீதம் குறைந்துள்ளதாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் புலம்பி உள்ளனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த ஜனவரி மாதம் முதல் 1லட்சத்து 80ஆயிரம் வாகனங்கள் பதிவான  நிலையில் கடந்த ஜூன் மாதம் 1லட்சத்து 50ஆயிரம் வாகனங்கள் மட்டுமே பதிவாகி உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக கடந்த 6 மாதத்தில் மட்டும் சுமார் 30ஆயிரம்  வாகனங்கள பதிவு குறைந்து வருவது  தெளிவாகி உள்ளது.

தமிழகம் முழுவதும் சுமார்   81 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களும், 60 பகுதி அலுவலகங் களும் உள்ளன. இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 8 ஆயிரம் வாகனங்கள் பதிவாகி வருவதாக கூறப்படுகிறது.  மேலும், வாகன ஓட்டுநர் சான்றிதழ்,  வாகனங்களுக்கு பதிவு எண் வழங்குதல், உரிமையாளர்களின் பெயர் மாற்றம், வாகன வரி வசூல், உரிமம் புதுப்பித்தல் போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகினற்ன.

ஆனால், வாகன விற்பனை சரிந்துள்ளதால், ஆர்டிஓ அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுவ தாக கூறப்படுகிறது. சுமார் 50 சதவிகிதம் அளவிற்கே பதிவுகள் நடைபெற்று வருவதாகவும், இதனால் வருமானம் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

போக்குவரத்துத் துறையின்கீழ் செயல்படும் வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் ஆண்டுதோறும் மாநில அரசுகளுக்கு சுமார் ரூ.1,500 கோடி வரை வருவாய் கிடைக்கும் ஆனால், இந்த ஆண்டு வாகன விற்பனை சரிவால்,  வருவாய் பாதியளவாவது கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

பிரதமர் மோடி இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகங்கள் பயன்பாட்டை அதிகரிப்பதில் முனைப்பாக உள்ளார். அதாவது வரும் 2030 ஆண்டுக்குள் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு 30 % இருக்கவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் நம் நாட்டில் எலெக்ட்ரிக் வாகங்களின் விலை அதிகமாக உள்ள நிலையில் இதற்கு வெளிநாட்டிலிருந்து பாகங்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது. அதன்படி இறக்குமதி செய்யப்பட்ட பாகங்கள் அசம்பல் செய்யப்பட்ட வாகனத்தின் விலை வரியுடன் சேர்த்து அதிகமாக விற்கப்படுகிறது.

ஹுண்டாய் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவின் முதல் மின்சாரக் காரை தமிழக முதல்வர் மூலம் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.