டில்லி

காஷ்மீர் மாநில விவகாரத்தில் மேலும் பல பணிகள் உள்ளன என பாஜக தொண்டர்களுக்கு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பாஜக தொடர்ந்து பல்லாண்டுகளாக காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விதி எண் 370 மற்றும் 35 ஏ ஆகியவற்றை நீக்க வேண்டும் என போராடி வந்தது.   மக்களவையில் பெரும்பான்மை இருந்த போதும் மாநிலங்களவையில் அக்கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால் பாஜகவால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.    ஆனால் தற்போது இரு அவைகளிலும் பெரும்பான்மை உள்ளதால் விதி எண் 370 மற்றும் 35 ஏ ஆகியவற்றை அரசு நீக்கி உள்ளது.

இது குறித்து தனது அமைச்சரவை சகாக்களுடன் பிரதமர் மோடி ஒரு சந்திப்பை நிகழ்த்தி உள்ளார்.  அந்த சந்திப்பில் அவர், “நமது நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது என்பது உண்மை தான்.  ஆனால் அதற்காக நமது கட்சித் தொண்டர்கள் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டாட வேண்டாம்.   அரசின் இந்த முடிவு ஒரு பகுதி மக்களை பாதிக்கும்.  அதைக் கட்சி அலட்சியம் செய்யக் கூடாது.

அரசின் இந்த முடிவை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும்படி நடந்துக் கொள்வதே நமது உண்மையான வெற்றியாகும்.   அத்துடன் தற்போது நேரக்கூடிய விளைவுகளைப் பாதுகாப்பு அதிகாரிகள் எதிர்கொள்ள வகையாக நமது தொண்டர்களும் உதவ வேண்டும்.  பாஜக அமைச்சர்களில் பெரும்பாலானோர் ஆர்  எஸ் எஸ் அமைப்பில் இருந்து வந்தவர்கள் என்பதால் மிகவும் மகிழ்ச்சி கொள்ள வாய்ப்புண்டு.  ஆனால் அதை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.