டில்லி

மாநிலங்களில் கொரோனாவை கண்டு பிடித்து சிகிச்சை அளிக்க வேண்டுமே தவிர சில நாட்கள் ஊரடங்கு விதிப்பதை தவிர்க்க வேண்டும் என மோடி கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது.  உலக அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.  குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழகம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, உத்தரப்பிரதேசம், டில்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் மொத்தத்தில் 65.5% நோயாளிகள் உள்ளனர்.   இம்மாநிலங்களில் மொத்த மரணத்தில் 77% நிகழ்ந்துள்ளன.

நேற்று பிரதமர் மோடி கொரோனா அதிக அளவில் பாதிக்கப்பட்ட இந்த 7 மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் பேச்சு வார்த்தை நடத்தினார்.  அப்போது அவர், “மாநில அளவில் கொரோனாவை கட்டுப்படுத்த குறுகிய கால கட்டத்துக்கு ஊரடங்கு பிறப்பிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஊரடங்கு என்பது உலக அளவில் நன்மை அளித்துள்ளது.  அதைப் பாராட்ட வேண்டும்.

ஆனால் ஊரடங்கால் பொருளாதாரம் மிகவும் சீர் கெட்டுள்ளது.  மொத்தத்தில் கொரோனாவை கண்டறிதல்,கட்டுப்படுத்தல் ஆகிய நடவடிக்கைகள் மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டும்.  இதை மாநிலங்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டு சோதனைகளை அதிகரித்து நோயாளிகளைக் கண்டறிந்து சிகிச்சை அளித்து கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவது முக்கியமாகும்.

தற்போது சேவைகள் செய்வோர் மற்றும் பொருட்கள் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலம் செல்வதில் மிகவும் தடை  ஏற்பட்டுள்ளது. இதனால் சாதாரண மக்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.   குறிப்பாகப் பல மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர் போக்குவரத்து இதனால் பிரச்சினையில் உள்ளது.  இதைத் தவிர்த்து உயிரைக் காக்கும் ஆக்சிஜன் போக்குவரத்தைத் தடையில்லாமல் இயங்கச் செய்ய வேண்டும்.” என் அறிவுரை வழங்கி உள்ளார்.