‘’அங்கேயும் ரெண்டு…இங்கேயும் ரெண்டு ….’’ நாட்டை சுற்றும் நான்கு பேர்..

நாளைய இந்தியாவை நிர்மானிக்கும் சக்திகளாக  உருவாகி இருக்கிறார்கள்-நான்கு பேர்.

அவர்கள்-

மோடி.

அமீத்ஷா.

ராகுல்.

பிரியங்கா

இவர்கள் இருவரில் ஒருவர் தான் இன்னும் நூறு நாட்களில் பிரதமராக பொறுப்பு ஏற்க போகிறார்கள்.

மற்ற இருவரும் ,தங்கள் கட்சியின்  வலிமையான முகங்கள்.

இன்னும் நூறு நாட்களுக்கு நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் இந்த நால்வரின் போஸ்டர்களையும், பேனர்களையும் பார்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரையிலான யாத்திரையை முதல் மூவர் ஏற்கனவே தொடங்கி விட- இன்னும் சில  தினங்களில் களத்துக்கு வருகிறார் –பிரியங்கா.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இரு வாரங்களுக்கு முன்னர்  நியமிக்கப்பட்ட  பிரியங்கா அமெரிக்காவில் இருந்து நேற்று முன் தினம் தான் டெல்லி வந்திறங்கினார்.அம்மா சோனியா,அண்ணன் ராகுலிடம் உடல் நலமும்,நாட்டு நலமும் விசாரித்த பிரியங்கா –மறுநாளே புயலாக சுழன்றடிக்க ஆரம்பித்து விட்டார்.

டெல்லியில் உள்ள  காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் அவருக்கு ராகுலுக்கு பக்கத்து அறை ஒதுக்கப்பட்டுள்ளது.ராகுல் கட்சியின் துணை தலைவராக இருந்த போது அவர் பயன் படுத்திய அறை அது.

மற்ற பொதுச்செயலாளர்களை போல் பிரியங்கா பத்தோடு பதினொன்று அல்ல என்பதையும், அவர் தான் –காங்கிரஸ் கட்சியின் –நம்பர்- 2 என்பதையும் உணர்த்தும் சமிக்ஞையே-இந்த அறை ஒதுக்கீடு.

நேற்று அங்கு வந்த பிரியங்கா ,முதலில் சந்தித்து பேசியது –கட்சி தலைவர் ராகுலை.

பின்னர் உ.பி.மாநில காங்கிரஸ் தலைவர்-ராஜ் பாப்பருடன் நீண்ட நேரம் உரையாடல்.

உ.பி.மாநிலத்தின் கிழக்கு பகுதியில் காங்கிரசுக்கு வெற்றியை பறித்து தரும் பொறுப்பு பிரியங்காவுக்கு கொடுக்கப்பட்டுள்ள நிலையில்- சில தினங்களில் அங்கே செல்ல உள்ளார்.

தனது சுற்றுப்பயண திட்டம் குறித்து பாப்பருடன் விவாதித்திருக்கிறார்.உ.பி.காங் கிரஸ் முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

கடந்த தேர்தல்களில் ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிக்குள் மட்டுமே வலம் வந்த பிரியங்கா –இந்த முறை நாடு முழுதும் சுற்றப்போகிறார்.

உ.பி.யில் முதல் கட்டமாக சில நாட்கள் பிரச்சாரம் செய்யும் பிரியங்கா அடுத்து  செல்ல விருக்கும் வெளி மாநிலம் –மகராஷ்டிரா.

பேசும் இடமும், தேதியும் முடிவாகவில்லை.

ராகுல் ,பிரியங்கா என்கிற இரட்டை குழல் துப்பாக்கியை ,மோடி-அமீத்ஷா என்கிற மற்றொரு இரட்டை குழல் துப்பாக்கி எப்படி எதிர் கொள்ளப்போகிறது என்பதை வரும் நாட்களில்  பார்க்கலாம்.

–பாப்பாங்குளம் பாரதி