புதுடெல்லி: குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் நாடெங்கிலும் பரவி வருவது, பலதரப்பாரும் அதில் பங்கெடுத்து வருவது மற்றும் மாணாக்கர்கள் அணி திரள்வது, எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு எதிர்ப்பது உள்ளிட்டவைகளால் மோடி – அமித்ஷா கூட்டணி அதிர்ச்சியடைந்துள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காஷ்மீர் சிறப்பு அதிகாரம் ரத்து மற்றும் பிரிப்பு, முத்தலாக், அயோத்தி தீர்ப்பு உள்ளிட்ட அடுத்தடுத்த நிகழ்வுகளால் பொறுமையிழந்த முஸ்லீம்கள், இந்தக் குடியுரிமை சட்ட விவகாரத்தில் பொங்கிவிட்டனர் என்று ஒரு தரப்பார் கூறினாலும், இதில் முஸ்லீம்கள் தவிர பிறரும் முனைப்புடன் ஈடுபடுகின்றனர்.

உயிர் பலிகளும், பொதுச் சொத்துக்களுக்கான சேதமும் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன. ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் சாலைகள் மூடப்படுவது தொடர்கிறது.

இந்த சட்டத்தால் சிறுபான்மை மக்களின் குடியுரிமை பாதிக்கப்படாது என்று உள்துறை அமைச்சகம் சார்பில் தொடர்ந்து விளக்கம் கொடுக்கப்பட்டாலும், ஜமா மஸ்ஜித் இமாமே விளக்கினாலும் எந்தப் பிரயோஜனமும் இல்லாத நிலையே உள்ளது.

இப்போராட்டங்கள் தொடர்ந்தால் நிலைமை என்னவாகுமென்று பாரதீய ஜனதாவில் பலர் கவலைப்பட, மோடி – அமித்ஷா கூட்டணியோ, சில நாட்களில் பிரச்சினை அடங்கிவிடும் என நினைக்கிறதாம். அவர்களுக்கு இந்த விஷயத்தில் பின்வாங்கும் எந்த எண்ணமும் இல்லையாம்.

அதேசமயம், அந்தக் கூட்டணியின் நலம் விரும்பிகள் சிலரோ, இந்த சட்டத்தை இன்னும் சிறிதுகாலம் கழித்து நிறைவேற்றியிருக்கலாம். இவ்வளவு அவசரப்பட்டிருக்க வேண்டியதில்லை என்கின்றனராம்.