பாக்., உளவுத் துறையுடன் மோடி, அமித்ஷாவுக்கு தொடர்பு….காங்கிரஸ் குற்றச்சாட்டு

டில்லி:

பாகிஸ்தான் உளவுத் துறைக்கும் மோடி, அமித்ஷா இடையே தொடர்பு உள்ளது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொறுப்பாளர் ரன்டீப் சுர்ஜேவாலா இன்று டில்லியில் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது இந்தியாவின் பிரதமராக மோடி வர வேண்டும் என்று பாகிஸ்தான் உளவுத்துறை தலைவர் அஸாத் டுரானி முன்னர் குறிப்பிட்டிருந்தார். மோடி, அமித் ஷா ஆகியோருக்கு பாகிஸ்தான் உளவுத்துறையுடன் உள்ள தொடர்புகளை நிரூபிக்க இதைவிட பெரிய ஆதாரம் தேவையில்லை.

இதை உறுதிபடுத்தும் வகையில் பஞ்சாப்பில் உள்ள பதான்கோட் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரிக்க வந்த பாகிஸ்தான் குழுவில் அந்நாட்டு உளவுத்துறை அதிகாரிகளும் அனுமதிக்கப்பட்டனர்.

பதான்கோட் தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை குழுவில் எந்த அடிப்படையில் சேர்க்கப்பட்டனர் என்பதற்கு பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும். இதற்காக மோடியும், அமித்ஷாவும் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றார்.