திரிபுரா முதல்வரை கண்டிக்கும் மோடி : பாஜக மூத்த தலைவர் தகவல்

 

டில்லி

ர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிவரும் திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேபை பிரதமர் மோடி கண்டித்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறி உள்ளார்.

திரிபுரா முதல்வராக மிகச் சமீபத்தில் பதவி ஏற்ற பிப்லாப் குமார் தேப் தன்னுடைய கருத்துக்களால் தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகி வருகிறார்.    மகாபாரதக் காலத்தில் இண்டர்நெட் மற்றும் செயற்கைக் கோள் மூலம் தொலைத் தொடர்பு இருந்ததாக அவர் கூறினார்.  அதன் பிறகு கடந்த 1997 ஆம் வருடம் டயான ஹைடன் உலக அழகியாக தேர்ந்தெடுத்தது பற்றி சந்தேகம் எழுப்பினார்.

தற்போது படித்த இளைஞர்களை பீடாக்கடை வைக்கச் சொல்லியும் மாடுகளை பராமறிக்கச் சொல்லியும் அறிவுரை அளித்தார்.   தேபின் இந்த பேச்சுக்கள் அனைத்தும் தொடர்ந்து சர்ச்சைகளைக் கிளப்பி வருகின்றன.   இவரது கருத்துக்கள் பல பாஜகவினருக்கு சங்கடமான நிலையை அளித்துள்ளது.

இது குறித்து பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர், “பல மூத்த பாஜக தலைவர்கள் தேப் கூறிய கருத்துக்களினால் எரிச்சல் அடைந்துள்ளனர்.   அவர் வாய்க்கு வந்தபடி பேசுவது கட்சியினருக்கு பெரும் அதிருப்தியை உண்டாக்கி உள்ளது.  பிரதமர் அவரது பேச்சை கண்டித்துள்ளார்.  பிரதமர் மோடியும் அமித் ஷாவும் வரும் மே மாதம் 2 ஆம் தேதி டில்லியில் அவரை நேரில் சந்தித்து கண்டிக்க உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.