உண்ணாவிரதத்தில் சாப்பிட்ட மோடி, அமித் ஷா : காங்கிரஸ் பிரமுகர்

டில்லி

ண்ணாவிரதம் இருந்த பிரதமர் மோடி சென்னையிலும், பாஜக தலைவர் அமித் ஷா கர்நாடகாவிலும் உணவு உண்டதாக காங்கிரஸ் பிரமுகர் குற்றம் சாட்டி உள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தொட்ர் கூட்டம் காங்கிரஸ், அதிமுக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளின் போராட்டத்தால் முழுவதுமாக முடங்கிப் போனது.   அதை கண்டித்து பாஜகவினர் நேற்று உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கூறப்பட்டது.   பல பகுதிகளிலும் பாஜகவினர் உண்ணாவிரதம் இருந்த நிலையில்  பிரதமர் மோடியும் அமித் ஷாவும் உணவு உண்டதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா கூறி உள்ளார்.

அவர், “பிரதமர் மோடியின் உண்ணாவிரதத்துக்கு எனது வாழ்த்துக்கள்.    சென்னை சென்ற மோடி காலை 8.40 மணிக்கு விமானத்தில் காலை உணவு உட்கொண்டுள்ளார்.    அதன் பிறகு சென்னையில் இருந்து டில்லி திரும்பும்  போது மதியம் 2.25 மணிக்கு மதிய உணவு உட்கொண்டுள்ளார்.   இந்த விவரம் அவருடைய பயண திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் அமித் ஷா தேர்தல் பிரசாரப் பயணத்தில் உள்ளார்.   அவர் நேற்று பகல் சுமார் 1.30 மணிக்கு கடக் என்னும் கிராமத்தில் விவசாயிகளுடன் சேர்ந்து உணவு உண்டு இருக்கிறர்.     அப்படி இருக்க பிரதமர் மோடியும் பாஜக தலைவர் அமித் ஷாவும் உண்ணாவிரதம் இருந்ததாக அவர்கள் கட்சியான பாஜக பெருமை பேசுகிறது.

உணவு உண்டபடியே உண்ணாவிரதம் இருந்தது எப்படி என்பதை பிரதமர் தான் விளக்க வேண்டும்.    பிரதமரும் அமித் ஷாவும் இதற்கு பதில் அளிக்கவில்லை எனில் அவர்கள் மக்களை பொய் சொல்லி ஏமாற்றுகிறார் எனப் பொருள்.

சுதந்திர போராட்ட காலங்களில் மக்களுக்காக பிரிட்டிஷ் அரசை எதிர்த்து மகாத்மா காந்தி நடத்திய உண்ணாவிரதப் போராட்டங்கள் என் நினைவுக்கு வருகின்றன.   அவை சுயநலம் இல்லா போராட்டங்கள்.    ஆனால் பாஜக தலைவர் உண்ணாவிரதம் என்னும் பெயரில் போலி நாடகம் ஆடி மக்களை ஏமாற்றி உள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.