பாட்னா: பிரதமர் மோடியும், முதல்-மந்திரி நிதிஷ்குமாரும் சேர்ந்து பீகாரை கொள்ளையடித்தனர் என்றும், புலம்பெயர் தொழிலாளர்களை புறக்கணித்தனர் என்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான  ராகுல்காந்தி  குற்றம் சாட்டியுள்ளார்.

பீகார் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு 2கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்து உள்ளன. 3வது கட்ட தேர்தல்  நடைபெற உள்ளது. இதையடுத்து, அங்கு  அனல் பறக்கும் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம்  நடைபெற்று வருகிறது.  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பீகார் சட்டசபை 3-வது கட்ட தேர்தலை சந்திக்கும் தொகுதிகளில், நேற்று பிரசாரத்தை தொடங்கினார்.

கதிஹார் என்ற இடத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ராகுல், கொரோனா பொதுமுடக்கத்தை அறிவித்த “ பிரதமர் மோடியும், உங்கள் மாநில நிதிஷ்குமாரும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு செல்ல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் நடந்தபோது எந்த உதவியும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டியதுடன், அந்த வேளையில், காங்கிரஸ் கட்சிதான், அந்த தொழிலாளர்களுக்காக பஸ்களை ஏற்பாடு செய்து கொடுத்து உதவியது என்பதை நினைவு படுத்தினார்.

காங்கிரஸ் கட்சி, ஆட்சியில் இல்லாததால், லட்சக்கணக்கானவர்களுக்கு உதவ முடியவில்லை என்று கூறிய ராகுல்,  எங்களால் இயன்றவரை உதவி செய்தோம். இங்கு வந்திருக்கும் இளைஞர்களை கேட்கிறேன். பிரதமர் மோடி, 2கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக கூறினாரே அது என்ன ஆனது? மோடி கூறியதை முதலவர்  நிதிஷ்குமாரும் கூறினாரே… உங்களுக்கு வேலை கிடைத்ததா?  வேலை என்ன ஆனது? இளைஞர்கள் இன்னும் ஏன் வேலையின்றி இருக்கிறார்கள்? என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

மோடி அரசு மக்களுக்கு எதிரான அரசு என்று கூறியவர், சமீபத்தில்   கொண்டுவந்துள்ள  3 வேளாண்மை சட்டங்களால், பிரதமர் மீது விவசாயிகள் கோபமாக உள்ளனர். மோடி, அம்பானி, அதானி ஆகியோரின் உருவ பொம்மைகளை தசரா தினத்தில் பஞ்சாப் விவசாயிகள் எரித்து தங்களது ஆத்திரத்தை தெரிவித்து உள்ளனர்.

நாட்டின் மொத்த சோளத்தில் 20 சதவீத சோளம்  உங்கள் மாநிலத்தில்தான் பீகார்)  உற்பத்தி ஆகிறது. ஆனால், மக்காசோளத்துக்கு உரிய விலை கிடைக்கிறதா? மோடியும், நிதிஷ்குமாரும் சேர்ந்து பீகாரை கொள்ளையடித்துள்ளனர். இது பீகார் இளைஞர்களுக்கும் தெரியும். எனவே,  இந்த தேர்தலில், அவர்களை ஆட்சியை விட்டு துரத்தும் வகையில், எங்கள் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்றவர், காங்கிரஸ் கூட்டணிக்கு  ஓட்டுப்போட பீகார் இளைஞர்களும், விவசாயிகளும் முடிவு செய்து விட்டனர் என்பது தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.