டில்லி

த்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி தாண்டன் மறைவுக்குப் பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மத்தியப் பிரதேச ஆளுநரான லால்ஜி தாண்டன் வயது மூப்பு காரணமாக மூச்சுத் திணறல் மற்றும் சீறுநீரக கோளாறால் இன்று காலை மரணம் அடைந்தார்.  உத்தரப்பிரதேசம் லக்னோவில் மருத்துவமனையில் அவர் மரணம் அடைந்ததை அவரது மகன் அசுதோஷ் தாண்டன் கோபால்ஜி தெரிவித்துள்ளார்.

அவரது மறைவுக்குத் தலைவர்கள் இரங்கல் செய்திகள் வெளியிட்டு வருகின்றனர்.

பிரதமர் மோடி தனது டிவிட்டரில், “லால்ஜி தாண்டனின் ஓய்வில்லா சமூகச் சேவை என்றும் மறக்க முடியாதது.  உத்தரப்பிரதேசத்தில் பாஜக வலுவடைய அவர் முக்கிய தொண்டாற்றினார். அவர் தனது திறமையான நிர்வாகத்தின் மூலம் மக்களுக்குப் பல நற்பணி ஆற்றி உள்ளார். அவரது மறைவு மிகவும் சோகத்தை அளிக்கிறது

லால்ஜி தாண்டன் அரசியலமைப்பு சட்டத்தை மிகவும் கற்று தேர்ந்தவர் ஆவார். இவர் அடல் பிகாரி வாஜ்பாயுடன் நீண்ட காலமாக நெருங்கிய நட்பில் இருந்தார்.  இந்த துக்க நேரத்தில் தாண்டனின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என பதிந்துள்ளார்.

முன்னாள் மபி முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங்,  மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி., உள்ளிட்ட பலரும் லால்ஜி தாண்டன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.