பெங்களூரு:

நாடாளுமன்ற தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், அடுத்தடுத்து நடைபெற உள்ள வாக்குப்பதிவுக்காக, தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக  பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் நாடு முழுவதும்  சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

ராகுல்காந்தி நேற்று தமிழகத்தில் பிரசாரம் மேற்கொண்ட நிலையில், இன்று கர்நாடகாவில் பிரசாரம் செய்ய உள்ளார். அதுபோல, பிரதமர் மோடி இன்று தமிழகத்தில் பிரசாரத்தை முடித்து விட்டு, உடனே கர்நாடகாவில் இன்று மாலை பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

இருவரும் இன்று கர்நாடகாவில் போட்டி பிரசாரம் செய்ய இருப்பதால், அங்க பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு உள்ளன.

கர்நாடகாவில் 2வது மற்றும் 3 வது கட்ட தேர்தல் நடைபெறும்  18ந்தேதி மற்றும் 23ந்தேதி ஆகிய நாட்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பெங்களூரு உள்பட தென் கர்நாடகத்தில் உள்ள 14 தொகுதிகளில் 18-ந் தேதியும், தார்வார், சிவமொக்கா உள்பட மீதமுள்ள 14 தொகுதிகளில் 23-ந் தேதியும் தேர்தல் நடக்கிறது. தேர்தல் பிரசாரம் முடிய இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அங்கு தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,  பிரதமர் மோடி நேற்று கொப்பல் தொகுதியில் பிரசாரம் செய்து பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அதையடுத்து, நேற்று இரவு மதுரை வந்த பிரதமர் இன்று தமிழகத்தில் சில இடங்களில் பிரசாரத்தை முடித்துவிட்டு பிற்பகல் மீண்டும் கர்நாடகா செல்கிறார்.

அங்க மங்களூருவில் மதியம் 2 மணிக்கும், பெங்களூருவில் மாலை 4 மணிக்கும் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

அதேவேளையில்  அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இன்று கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இன்று பகல்  12 மணிக்கு கோலார் பொதுக் கூட்டத்திலும், மதியம் 3 மணிக்கு சித்ரதுர்காவில் நடைபெறும் கட்சியின் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

அதை முடித்துக் கொண்டு அவர் மண்டியா தொகுதியில் இடம் பெற்றுள்ள கே.ஆர்.நகர் தாலுகாவில் மாலை 5.30 மணிக்கு காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

இரு தலைவர்களும் கர்நாடகாவை முற்றுகையிட்டு போட்டி பிரசாரம் மேற்கொள்வதால், அங்கு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.